சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படவுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி தேமுதிகவுக்கும், திரையுலகுக்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை தீவுத் திடலில் நாளை (டிச.29) வெள்ளக்கிழமை காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்து, இறுதிச் சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். | வாசிக்க > கண்ணீர் மழையில் கோயம்பேடு – விஜயகாந்த் உடலுக்கு தலைவர்கள், தேமுதிகவினர், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி
கோயம்பேடு பகுதியில் இன்று பகல் நேரத்தில் இருந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடும் பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள மேம்பாலங்கள் என காணும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் குவிந்து வருவதால், தீவுத்திடலில் வைப்பது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உயர் காவல்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினர்.