நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைபாடு காரணமாக நேற்று (28ம் தேதி டிசம்பர்) காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், கவுண்டமணி, விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் மோகன், “திரையுலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டது. எல்லோரிடமும் நல்ல முறையில் பழகுபவர், எதார்த்தமான மனிதர். பெரியவர், சின்னவர், சாதி பாகுபாடு என்பதெல்லாம் அவர் அகராதியிலேயே இல்லை. எல்லோரிடமும் சமமாகப் பழகுவார். பசில அவர் அலுவலகத்துக்குப் போன எல்லாருக்கும் சாப்பாடு போடுவார். பிரச்னைனு அவர் அலுவலகத்துக்குப் போனாலும் அதையும் தீர்த்து வைத்து அனுப்புவார். அவங்களுக்கெல்லாம் பெரும் நம்பிக்கையாக இருந்தார்.
அந்த நம்பிக்கையை இப்போ நாங்க எல்லோரும் இழந்திருக்கோம். அவரோட நிர்வாகத் திறமை, ஆளுமை, முரட்டு தைரியம் எல்லாமே ரொம்பப் பெரிய விஷயம். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு என் மனமார்ந்த இரங்கல்ளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவிலும், நிஜவாழ்க்கையிலும் கதாநாயகனாக வாழ்ந்துள்ள ஒரு நல்ல தலைவனை நாம் இழந்துவிட்டோம். மக்களை நல்ல விதத்தில் வழிகாட்டியுள்ளார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர் நம் எல்லோர் வாழ்க்கையையும் தொட்டுள்ளார், நன்மைகள் செய்துள்ளார். அவரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கு இது ஒரு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. இந்த நேரத்தில் எல்லோரும் அவருடைய விருப்பம் என்னவோ அதை நிறைவேற்ற வேண்டும்” என்று நேரில் அஞ்சலி செலுத்தியப் பின் பேசியுள்ளார்.
நடிகை குஷ்பூ, “இந்த கூட்டம் மாபெரும் நடிகருக்கோ அரசியல் தலைவருக்கோ இல்லாமல் நல்ல மனிதருக்காக வந்துள்ளது. திரையுலகு மட்டுமல்ல, யாரிடம் கேட்டாலும் நல்ல மனிதர் என்றால் விஜயகாந்த்தைதான் சொல்வோம்” என்றார் வருத்தத்துடன்.
நடிகர் பார்த்திபன், “என் வாழ்க்கையைத் தொடங்கி வைத்தவரே விஜயகாந்த்தான். விஜயகாந்த் சாரின் ரசிகர்கள் அனைவருமே அவருடைய மனிதாபிமானத்திற்கு மட்டுமே ரசிகர்களாக இருப்பாங்க, அந்த வகையில் நானும் அவருக்குத் தீவிர ரசிகன். விஜயகாந்த் சாரை இன்று நம் இதயங்களில்தான் அடக்கம் செய்யப் போகிறோம்” என்றார்.
நடிகை ரேகா, “அவரோட கல்யாணத்துக்குப் போன என்னால அவரோட இறப்புக்கு அஞ்சலி செலுத்த நேரில் போக முடியவில்லை. நானும், நடிகர் யோகி பாபுவும் படப்பிடிப்பிற்காகக் கேரளாவில் இருக்கிறோம். அவர் கல்யாணத்துக்குப் போயி கூட்டத்தில மாட்டிக்கிட்டப்ப விஜயகாந்த் சார்தான் அவரும், அவரோட மனைவி பிரேமலதாவும் வந்த காரில் ஏற்றி என்னைக் கூட்டத்திலிருந்து காப்பாற்றினார். அப்போது காரில் இடமில்லாமல் அவரின் மனைவி மடியில்தான் உட்கார்ந்து வந்தேன். அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

அவருடன் 4, 5 படங்களில் நடித்திருக்கிறேன். ரொம்ப நல்லவர் விஜயகாந்த் சார். அவரோட மனைவி பிரேமலதாவும், அவரது பிள்ளைகளும் அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை. சினிமா, அரசியல், பொதுவாழ்வு என அனைத்திலும் சாதித்து மக்களுக்குப் பல நன்மைகள் செய்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்று வீடியோ பதிவிட்டுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ், “நான் சினிமாவில விஜயகாந்த்தைவிட சீனியர். அவரைவிட எனக்கு வயது குறைவுதான். இருப்பினும் என்னை அண்ணன்னுதான் கூப்பிடுவாரு. ‘சொக்க தங்கம்’ படத்தோட ஷூட்டிங் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஷூட்டிங் வேண்டாம். அன்னைக்கு நான் என் ரசிகர்களை சந்திக்கணும்’னு சொல்வாரு. அந்த அளவுக்கு ரசிகர்கள் மேல உயிராக இருந்தார். எத்தனையோ சாதனைகளைப் படைச்சிருக்கார். எல்லோரும் இவரை கறுப்பு எம்.ஜி.ஆர்னு சொல்லுவாங்க. அதனை நானும் பார்த்திருக்கேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த்
“யாருக்காவது மருத்துவ உதவின்னா முதல்ல செய்றது விஜயகாந்த்தான். நான் மருத்துவமனைல அனுமதிக்கப்பட்டிருந்தப்ப நான் குணமாகணுங்றதுக்காக அவ்ளோ பிரயத்தனப்பட்டாரு. எல்லா நடிகர்களுக்காகவும் எப்போதும் துணை நிற்பார். அந்தக் குணம் இங்க பல பேர்க்கிட்ட இல்ல. வாழ்க கேப்டன்!
சினிமாக்கு வெளில இருக்கிறவங்க ‘இவரை ஏன் கேப்டன்னு கூப்பிடறாங்க’னு கேப்பாங்க. உலகிலுள்ள அனைத்து தமிழர்களுக்குமான தலைவன், உண்மையான கேப்டன். அவரோட வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வியாக ‘சாப்டீங்களா’ன்னு கேட்பாரு. நான் உயிருக்குப் போராடிட்டு இருந்த சமயத்துல, ‘தம்பி காசு வச்சுருப்பாணான்னு தெரில, அவனுக்கு நல்ல மருத்துவத்தைப் பாருங்க’னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னார். சினிமாவுக்கும், அரசியலுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர். நடிகர் சங்கம் இன்னைக்கு கடன்ல இருக்கு. ஆனா, அப்போ கடன்ல இருந்து மீட்டு எடுத்துட்டு வந்தார்.
நடிகர் தாமு
“கேப்டன் என்பது சினிமா மூலம் கிடைத்த பட்டமாக இருந்தாலும் நாங்கள் அவரின் கேப்டன்சியை நேரில் பார்த்திருக்கிறோம். அவரின் ஆளுமைத்திறனும் நிர்வாகத்திறனும் அபாரமானவை. அவர் தைரியத்தின் உச்சம். வீரன். நடிகர் சங்கத்தின் பெருமைக்குரிய தலைவர். சின்ன நடிகர், பெரிய நடிகர் என்றில்லாமல் எல்லாரையும் சமமாக மதிப்பவர். முதல் வார்த்தையா நல்லாருக்கியானு கேட்காம சாப்ட்டியானுதான் கேட்பாரு.”

நடிகர் ராம்கி
“கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம். ‘செந்தூரப்பூவே’ படத்துல விஜயகாந்த் சாரோட பேரு கேப்டன். அவருக்கு வேற பேரே கிடையாது படத்துல. அந்த ஷூட்டிங்ல நாங்களும் விஜயகாந்த் சார கேப்டன்னு கூப்பிட ஆரம்பிச்சோம். அதுல இருந்துதான் அவருக்கு கேப்டன்னு பேரு வந்துச்சு.
துணிச்சலா இறங்கி வேலை செய்யக்கூடிய ஆளு. நடிகர் சங்கம் கடன்ல இருந்தப்ப அதையெல்லாம் தீர்த்து நேர்வழிப்படுத்துனாரு. எல்லா நடிகர்களும் தலைவனா ஏத்துக்கிட்ட ஒரே நடிகர் கேப்டன்தான்.
நானும் கேப்டனும் ஒரு படத்துல நடிச்சப்ப ஆக்ஷன் சீன்ல அவரோட தோள்பட்டை இறங்கிடுச்சு. கேப்டன் வியர்த்துப் போயி வலில துடிச்சே போயிட்டார். ஆனா, அடுத்த 10 நிமிசத்துல அவரே தோள்ப்பட்டைய தூக்கி சரி பண்ணிட்டு ஷாட்டுக்கு வந்துட்டார்.”
நடிகர் லிவிங்ஸ்டன்
“அவர் சம்பாதிச்சு வச்சிருக்குற மக்கள் செல்வாக்க பார்க்குறப்ப ஆச்சர்யமா இருக்கு. அதிகாரத்துல இருக்குறப்ப கூடுற கூட்டம், பிரதிபலன் எதிர்பார்க்குற கூட்டம். ஒரு மனுசன் இறக்குறப்ப கூடுற கூட்டம்தான் உண்மையானது. அவரோட மனிதநேயத்துக்கும் அவர் செஞ்ச தர்மத்துக்கும் கூடியிருக்க கூட்டம் இது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் அவர்.

கறுப்பு எம்.ஜி.ஆர் அவர். அவர் கண்ணுல ஒரு பவர் இருக்கும். எனக்கு சம்பளமா சில ஆயிரங்கள்தான் கொடுத்திட்டு இருந்தாங்க. அதையும் பிச்சு பிச்சுதான் கொடுப்பாங்க. ஆனா, என்னோட ரெண்டாவது படத்துக்கு கேப்டன் விஜயகாந்த் 8 லட்சம் சம்பளம் கொடுத்தார். முதல் முதலா என்னை லட்சத்த பார்க்க வச்சவரு கேப்டன்தான். அந்த பணத்தை அப்டியே எங்க அம்மாவோட காலடில கொண்டு வச்சேன்.”
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து மதியம் 01:00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தே.மு.தி.க தலைமைக் கழக அலுவலகம் வந்தடையும். இறுதிச்சடங்கானது மாலை 04:45 மணியளவில் தொடங்கி, தே.மு.தி.க தலைமைக் கழக வளாகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.