சபரிமலை : மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(டிச. 30) மாலை திறக்கப்படுகிறது. மண்டலகால அனுபவத்தின் அடிப்படையில் மகர விளக்கு காலத்தில் பக்தர்களின் எண்ணிக்கை முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
டிச.27 ல் மண்டல பூஜையுடன் சபரிமலையில் மண்டல காலம் நிறைவு பெற்று அன்றிரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சபரிமலையில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
மகர விளக்கு கால பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை (டிச. 31)அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் மகர விளக்கு காலத்துக்கான நெய்யபிஷேகத்தை தந்திரி மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். ஜன. 15- ல் மகரஜோதி பெருவிழா நடக்கிறது. ஜன. 21 காலை 7:00 க்கு நடை அடைக்கப்படும்.
மண்டல காலத்தில் அதிகமான முன்பதிவு அனுமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு மகர விளக்கு காலத்தில் தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜன. 15 வரை தரிசன முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த நாட்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜு கூறினார்.
இந்த நாட்களில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறப்பதால் 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே புக்கிங் வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் ஜன.14 15 ல் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரம் ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரம் என சுருக்கப்பட்டுள்ளது.
மண்டல காலத்தில் பக்தர்களின் நீண்ட நேரம் காத்திருப்பு அதனால் பக்தர்கள் ஏற்பட்ட சிரமம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மகர விளக்கு காலத்தில் தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி போலீசாருக்கு கேரள மாநில அரசு உத்தர
விட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement