`விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா?' – பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்த பெண் வீட்டார்?!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்குக் கடந்த 2019ம் ஆண்டு கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஆனால் கொரோனா, விஜயகாந்தின் உடல்நிலை ஆகிய காரணங்களினால் அந்தத் திருமணம் தள்ளிப் போய் கடைசியில் நடக்காமல் போனதாகவும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தத் தகவல் உண்மையா எனத் தெரிந்துகொள்ள விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் குறித்து வைரலான போட்டோ

“விஜயகாந்த் உடல்நிலை ஓரளவுக்கு ஆரோக்கியமா இருக்கும் போதே மூத்த மகன் விஜய பிரபாகரனுக்குத் திருமணம் செய்ய நினைச்ச பிரேமலதா, மகனுக்காகத் தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க. இதுக்காகத் திருமணத் தகவல் மையங்கள் மூலமா அவங்க முயற்சி செய்தாங்க. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் ஒரு பொண்ணு இருப்பதாகத் தெரிய வர, அந்தப் பெண்ணைப் பார்த்து வரலாம்னு போனது நிஜம்தான்…” என்ற அவர்கள் பெண் பார்க்கும் இடத்தில் மேற்கொண்டு நடந்தவை குறித்தும் இங்கே பகிர்ந்தார்கள்.

“பெண்ணை நேரில் போய் பார்த்துட்டு ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நினைச்சுதான் சென்னையில இருந்து மகன் மற்றும் நெருங்கிய உறவுகள் சிலருடன் கோயம்புத்தூருக்குப் போனாங்க பிரேமலதா. ஆனா அங்க போய் இறங்கினதுமே பிரேமலதாவுக்குப் பெரிய அதிர்ச்சி.

பெண் பார்க்கிற நிகழ்வுதானேன்னு தன்னுடைய சொந்தக்காரர்களில்கூட எல்லாருக்கும் தகவல் சொல்லாம ரொம்ப சிம்பிளா சிலரை மட்டும் கூட்டிக்கிட்டு இவங்க போயிருக்காங்க. அந்தப் பெண் வீட்டாரோ ‘விஜயகாந்த் பையனுக்கு எங்க பெண்ணைக் கேட்டு வர்றாங்க’ என்கிற ரீதியில் அங்கு சொன்னார்களோ என்னவோ, கோயம்புத்தூரிலிருந்த அத்தனை மீடியாகாரர்களும் அங்க வந்து குவிஞ்சிருந்தங்களாம்.

‘என்னங்க பொண்ணுதானே பார்க்க வந்திருக்கோம். எதுக்கு மீடியாவுக்கெல்லாம் சொன்னீங்க’ என பிரேமலதா கேட்டதற்கு, ‘நாங்க யாரும் சொல்லலை. மீடியாக்காரங்க எப்படியோ நீங்க வர்ற தகவல் தெரிஞ்சு வந்துட்டாங்க’ எனப் பதில் சொல்லியிருக்காங்க.

பிரேமலதா, விஜயகாந்த்

அதுவும் போக சிம்பிளா வீட்டுல இதை நடத்தாம, இந்த பெண் பார்க்கிற நிகழ்ச்சிக்காக ஒரு கல்யாண மண்டபத்தையே வாடகைக்குப் பிடிச்சிருக்காங்க. பெண் பார்க்கும் படலத்தை அவங்க தரப்பு ஊரைக்கூட்டி இப்படி விளம்பரப்படுத்தும்னு பிரேமலதா எதிர்பார்க்கவே இல்லையாம். அதனால கோயம்புத்தூர் போய் இறங்கி இதையெல்லாம் பார்த்ததுமே அவங்க ரொம்பவே அப்செட்.

கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப் போரா இருக்கே… திருமணம் முடிஞ்சா இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாங்களோனு திகைச்சிட்டாங்க.

அதனால போன இடத்துல பெண்ணை மட்டும் பார்த்துட்டு, ‘சென்னை போய் எல்லார்கிட்டயும் கலந்து பேசி பதில் சொல்றோம்’ எனச் சொல்லி விட்டு வந்துவிட்டார்களாம்.

பெண் வீட்டாரின் அதிகப்படியான ஆர்வமே பிரேமலதாவை எரிச்சல் படுத்த, ‘இந்தச் சம்பந்தம் சரிப்பட்டு வராது’ என முடிவெடுத்துட்டார்” என்கிறார்கள் அவர்கள்.

ஆனால் பெண் பார்க்கப் போன இடத்தில் சம்பந்தப்பட்ட பெண், விஜய பிரபாகரன் இருவரையும் சேர்த்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகவே, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல் பரவி, அதன் தொடர்ச்சியாக கொரோனா மற்றும் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாகவே திருமணம் தள்ளிப் போனதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

விஜய பிரபாகரனும் அந்தப் பெண்ணும் அருகருகே அமர்ந்திருக்க, பிரேமலதா அவர்களுக்கு அட்சதை தூவி ஆசிர்வதிப்பது போன்ற படங்களும் வெளியாகியிருந்தன. இதைப் பற்றியும் கேட்டபோது, “பெண் பார்க்கப் போனபோது விஜய பிரபாகரன் கிராண்டா டிரஸ் பண்ணியிருந்தார். அவரைப் பக்கத்துல உட்காரச் சொல்லிட்டு, ‘எங்க பொண்ணை ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னு பிரேமலதா கிட்ட கேட்டிருக்காங்க. அதனால அவங்க பண்ணாங்க. ஒருவேளை நிச்சயதார்த்தம் நடந்திருந்தா, விஜயகாந்த் அதுக்குப் போயிருப்பாரே! கட்சி நிர்வாகிகளும் போயிருப்பாங்களே! அப்படி எதுவுமே நடக்கலைங்கறதுதான் நிஜம்” என்கிறார்கள், நெருங்கிய குடும்ப உறவினர்கள்.

சண்முகபாண்டியன்

ஒரு கட்டத்தில் கோவையில் நடந்த இந்தச் சம்பவத்தையே மறந்துவிட்ட பிரேமலதா கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சில திருமண தகவல் மையங்களை அணுகி மூத்த மகனுடன் இளைய மகன் சண்முகப் பாண்டியனுக்கும் சேர்த்தே பெண் தேடத் தொடங்கினாராம். இந்தச் சூழலில்தான் விஜயகாந்தின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அவர் கடந்த வாரம் இறந்து விட்டார்.

எனவே இப்போதைக்கு மகன்களின் திருமணம் குறித்து பிரேமலதா எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. சில மாதங்கள் கடந்த பிறகே எதுவும் தெரிய வரும்.

விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் இருவருமே அம்மா பிரேமலதாவின் இஷ்டப்படி, அவரின் தேர்வுப்படியே திருமணம் செய்து கொள்ளத் தயார் எனச் சொல்லிவிட்டார்களாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.