இதற்கு முன்பு வரை நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பயணித்தால், அவரின் சில்வர் நிற லேண்ட்ரோவர் டிஃபெண்டர் காரைச் சுற்றி, சுமார் 6 வெள்ளை நிற எஸ்யூவிக்கள் கான்வாய் கார்களாக வலம் வந்து பாதுகாக்கும்.
நேற்று புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு ஆசிகள் வாங்குவதற்காக கோபாலபுரம் சென்றார். அப்போது அவரின் டிஃபெண்டர் காரைச் சுற்றி ஒரே கறுப்பு நிற கான்வாய் வலம் வந்தது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த கார்கள், இப்போது கறுப்பு நிறத்துக்கு மாறியிருக்கின்றன. எல்லாமே டொயோட்டா இனோவா எம்பிவிகள். அரசாங்கத் தகவலின்படி, சாலையில் மற்ற வாகனங்களிடம் இருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்பு நிறத்துக்கு இவை மாறியதாகச் சொல்கிறார்கள்.

முதல்வரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த கான்வாய்க்காக, 6 டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா கார்கள் பர்ச்சேஸ் செய்யப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களின் பாதுகாப்பு வாகனங்களைப் போலவே இதுவும் கறுப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டிருப்பதோடு, ஏற்கெனவே இருந்த வெள்ளை நிற வாகனங்களைத் தாண்டி இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்திருக்கிறார்களாம். இந்தக் கார்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் எப்போதுமே ரூஃபில் சுற்றிக் கொண்டிருக்கும். முதல்வர் பயணிக்கும்போது, இது 360 டிகிரியில் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பதிவு செய்து கொண்டே இருக்கும்.
சைரன்கள் வழக்கம்போல் இருக்கின்றன. தொழில்நுட்பங்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறார்கள். இணைய வழியில் யாருமே ஹேக் பண்ண முடியாத அளவுக்கு ஜாமர்கள் பொருத்தப்பட்டு, அட்வான்ஸ்ட் பைலட் தொழில்நுட்ப வசதியுடன் இந்தக் கார்கள் இயங்குமாம்.
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிரதமர் போன்றவர்களுக்கு, SPG (Special Protection Group) அதிகாரிகள், ஹெவி ஆர்மர்டு பிஎம்டபிள்யூ கார்களில் பாதுகாப்புக் கொடுப்பார்கள். மாநில முதல்வர்களைப் பொருத்தவரை என்.எஸ்.ஜி… அப்புறம் எஸ்.எஸ்.ஜி என்று மாறி இப்போது (கருணாநிதி காலத்திலிருந்து) கோர்செல் பாதுகாப்பு என்று சொல்வார்கள். சுருக்கமாக கறுப்புப் பூனைப் படை என்பார்கள். இந்த கோர்செல் பாதுகாப்பு, SP அந்தஸ்து கொண்ட அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்கும். மேலும் இதில் கூடுதல் எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் போன்றவர்கள் இருப்பார்கள்.

இந்தக் காரில் காவல்துறைப் பாதுகாப்பு அதிகாரிகள் 6 பேர் நின்று கொண்டு பயணிக்கும் அளவுக்கு இதன் பக்கவாட்டில் தடிமனான ஃப்ளோர் போர்டு அமைத்திருக்கிறார்கள். இது தவிர ஃபேக்டரி ஃபிட்டட் தாண்டி, பல மாடிஃபிகேஷன்களும் செய்திருக்கிறார்கள். இதில் முன்னால் செல்லும் காருக்கு மட்டும் முன் பக்கம் கிரில்லில் Pilot என்கிற பெரிய நேம் போர்டு இருக்கிறது. இந்த 6 கார்களில் 2 கார்களில் புல்லட் ப்ரூஃப் மேடு கொண்டு ஆர்மர் ஸ்டைலில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் Cyber Threat களில் இருந்து அலெர்ட் செய்யும்படி, பாதுகாக்கும்படி Cutting – Edge டெக்னாலஜி… என முதல்வரின் இனோவாக்கள் அனைத்தும் அட்வான்ஸ்டு ஆகியிருக்கின்றன.