புதுடில்லி திருநங்கை என அடையாளம் தெரிந்த பின், ஆசிரியர் பணியில் இருந்து, இரு பள்ளிகள் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து, திருநங்கை ஆசிரியர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
உச்ச நீதிமன்றத்தில், திருநங்கை ஆசிரியர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தர பிரதேசத்தின் கேரி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியர் பணியில் சேர்ந்து, ஆறு நாட்கள் பாடம் எடுத்தேன். திருநங்கை என தெரிய வந்ததும், என்னை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தனர்.
இதையடுத்து, குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியர் பணி கிடைத்தது. திருநங்கை என தெரிந்ததும் பணி மறுக்கப்பட்டது. இதில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த அமர்வு, இந்த மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் குஜராத், உ.பி., அரசுகளுக்கு உத்தரவிட்டது.
மேலும், பணிநீக்கம் செய்த சம்பந்தப்பட்ட பள்ளிகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை, நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement