தனுஷ் நடிப்பில் ‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
சிவராஜ்குமார், குமரவேல், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “2011ஆம் ஆண்டு ‘தேவதாஸ்’னு ஒருக் கதை எழுதினேன். ‘ராக்கி’ படத்தோட கதை எழுதிட்டு ‘D’ (தனுஷ்) கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். இப்போ இந்த வாய்ப்புக் கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ படம் ரிலீஸுக்கு முன்னாடியே இந்த கதையில் நடிக்கிறதுக்கு ‘D’ ஒத்துகிட்டார். நாங்க அடுத்ததாக ஒரு படம் பண்றோம். அது இதைவிட பெருசா இருக்கும்.
12 வருஷத்துக்கு முன்னாடி ஜி.வி பிரகாஷ்கூட படம் பண்ண வேண்டியது. அது இப்போதான் நடந்திருக்கு. சிவாண்ணா (சிவராஜ்குமார்) கதாபாத்திரத்துக்குச் சில பேர்கிட்ட கேட்டேன். அவரை நேர்ல பார்க்கும்போது காட் பாதர் படத்தோட சீன்ல போன மாதிரி இருந்தது. செட்ல என்னை மட்டுமில்ல என்னோட டீமையும் சேர்த்து சிவாண்ணா கலாய்ப்பார். நான் எடுத்ததிலேயே வன்முறை கம்மியாக இருந்தது இந்த படத்துலதான்” என்றார்.