புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னு (56). காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான இவர், ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மத்திய அரசின் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் குர்பத்வந்த் சிங் பன்னுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பின்னணியில் நிகில் குப்தா என்ற இந்தியர், குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்ய முயற்சி செய்ததாக அமெரிக்க அரசு அண்மையில் குற்றம் சாட்டியது. அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று செக் குடியரசு நாட்டில் தங்கியிருந்த நிகில் குப்தா கடந்த நவம்பர் 29-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உதவி கோரி நிகில் குப்தா தரப்பில் அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “நிகில் குப்தா மீதான வழக்கு வெளிநாட்டு நீதிமன்றம் தொடர்புடையது. இது தங்கள் வரம்புக்கு உட்பட்டது கிடையாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.