வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பை சேர்ந்த மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கு, ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘அயோத்தியில் கடவுள் ராமரின் சிலையை நிறுவி, பிரதிஷ்டை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ராமரின் குழந்தை வடிவிலான சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அயோத்தி நில வழக்கில் முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மனுதாரர் இக்பால் அன்சாரி என்பவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அவருக்கு ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் அழைப்பிதழ் வழங்கினர்.
இது தொடர்பாக இக்பால் அன்சாரி கூறியதாவது: அயோத்தியில் கடவுள் ராமரின் சிலையை நிறுவி, பிரதிஷ்டை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தி ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்குமான நல்லிணக்க பூமி. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மதிக்கின்றனர். எங்கும் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லை. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement