மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடம் பிடிப்பவை சினிமா. கால மாற்றத்தால் தமிழகத்தில் பல தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது மயிலாடுதுறை மக்கள் உணர்வுகளில் 62 ஆண்டுகள் கலந்திருந்த தியேட்டர் ஒன்று மூடப்பட்டது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மையப்பகுதியில் உள்ளது பியர்லெஸ் திரையரங்கம். 1962-ல் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்தின் மூலம் தன் கலைப்பயணத்தைத் தொடங்கியது. மயிலாடுதுறை மட்டுமன்றி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்தும் மக்கள் படம் பார்ப்பதற்கு இந்தத் திரையரங்கத்துக்கு வருவார்கள். இங்கு வெளியான நூற்றுக்கணக்கான படங்கள் வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன. அதற்கான ஷீல்டுகள் தியேட்டர் வரவேற்பறையில் நிரம்பியிருக்கின்றன.
போதுமான வருமானம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு நிர்வாகச் சூழ்நிலை காரணமாக பியர்லெஸ் தியேட்டர் மூடப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்தது. சில தினங்களுக்கு முன்பு தன் ஆட்டம் பாட்டத்தை முழுமையாக பியர்லெஸ் நிறுத்திக்கொள்ள, மயிலாடுதுறை மக்களுக்கு வருத்தம் கூடியது.

தங்கள் வாழ்வில் ஒன்றாகக் கலந்த ஒரு திரையரங்கம் மூடப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பலரும் தியேட்டருக்குச் சென்று நினைவுகளை அசைபோட்டபடி செல்பி எடுத்து வருத்தத்தை வெளிப்படுத்திவருகின்றனர். மயிலாடுதுறையின் அடையாளமாக மக்கள் மனதில் பதிந்த பியர்லெஸ் தியேட்டர் மூடப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முரளிதரன் என்பவர், “சிவாஜி, சாவித்திரி, குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படம்தான் முதன் முதலில் பியர்லெஸ் திரையரங்கில் வெளியானது. பியர்லெஸ் (Peerless) என்றால் இணையற்றது என்று பொருள். அந்த வகையில் மக்களுக்கு எண்ணிலடங்காத இணையற்ற அனுபவத்தைத் தந்திருக்கிறது இந்தத் திரையரங்கம்.

மயிலாடுதுறை காவிரியின் கடைமடைப்பகுதி. விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் அவர்களுடைய ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். படம் பார்த்து உழைத்த களைப்பைப் போக்கிக்கொள்வார்கள். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் அருகிலேயே இருப்பதால் அனைவரது முதல் சாய்ஸாக பியர்லெஸ் இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் எனப் பல தலைமுறை முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கு வெளியாகி நூறு நாள்களுக்கு மேல் ஓடி சக்கைபோடு போட்டிருக்கின்றன.
‘முந்தானை முடிச்சு’, ‘கரகாட்டக்காரன்’, ‘அம்மன்கோவில் கிழக்காலே’, ‘மனிதன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’ உள்ளிட்ட பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டன. மக்களுக்கும் பியர்லெஸ் தியேட்டருக்குமான மறக்க முடியாத அனுபவங்கள் பல இருக்கும். இங்கு படம் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சோகத்தை மறந்துள்ளனர். சமதர்மம் காக்கும் இடமாக இருந்த பியர்லெஸ் கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஓடாததால் லாபமில்லை என்கிறார்கள்.

பழைமை மாறாமல் மரப்பலகை கொண்ட இருக்கையுடன் புதுப்பிக்காமல் இருந்ததே மக்கள் வருகை குறைந்ததற்கு காரணம். இன்றைக்கு கையடக்க செல்போனில் பல வகையான பொதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்ள சூழல் வாய்க்காததால் தியேட்டர் மூடப்பட்டுள்ளது. பாக்யராஜ் நடித்த ‘மூன்றாம் மனிதன்’ படத்துடன் பியர்லெஸ் தியேட்டருக்கும், மக்களுக்குமான உறவு முடிவுக்கு வந்துவிட்டது.
மயிலாடுதுறை மக்கள் ஒவ்வொருவரும் பியர்லெஸ் தியேட்டர் குறித்து ஒரு அனுபவத்தை சொல்கிறார்கள். ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க ஊழியர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், டிக்கெட் அச்சடித்துத் தந்த பிரஸ்வரைக்கும் பியர்லெஸ் நிர்வாகம் நன்றி தெரிவித்திருந்ததைப் பார்த்துப் பலரும் கலங்கிவிட்டனர். தன் வீட்டில் ஒருவரை இழந்துவிட்டால் ஏற்படுகின்ற வலியை பியர்லெஸ் மூடுவிழா ஏற்படுத்தியுள்ளது. இதை மக்கள் எளிதில் மறக்கமாட்டார்கள். ஏதோ ஒரு சமயத்தில் பியர்லெஸ்ஸில் படம் பார்த்த நினைவுகள் குறித்த உணர்வை வெளிப்படுத்திக்கொண்டிருப்பர். மக்கள் வாழ்வில் ஒன்றாகக் கலந்திருந்த பியர்லெஸ் மூடப்பட்டது மயிலாடுதுறை மக்களுக்கு இழப்பு” என்றார்.