India – Maldives Row: மோடி குறித்து அவதூறு; இந்தியாவைச் சீண்டிய மாலத்தீவு – இழப்பும் தாக்கமும் என்ன?

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர், ‘லட்சத்தீவு, வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது, காலம் காலமாக நீடித்துவரும் பாரம்பர்ய மரபு, மக்களுக்கான சான்று. கற்கவும், வளர்வதற்குமான வாய்ப்பாக என் பயணம் அமைந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மோடி

மேலும், ‘லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது’ என்று குறிப்பிட்டு, லட்சத்தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பிரதமர் பகிர்ந்திருந்தார்.

அந்தப் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக `லட்சத்தீவு’ மாறியது. இந்த நிலையில், மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவித்தது, இரு நாடுகளிடையிலான உறவில் கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லட்சத்தீவு

‘மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயல்கிறார். மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது’ என்று மாலத்தீவின் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடியை `இஸ்ரேலின் ஊதுகுழல்’ என்று மாலத்தீவின் தகவல், கலைத்துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா குறிப்பிட்டிருக்கிறார்.

மாலத்தீவு இளைஞர் நலத்துறை இணையமைச்சர் மால்ஷா ஷெரீப், ‘மோடி முர்தாபாத்’ என்று இந்திய பிரதமரை இழிவாக விமர்சித்தார். மாலத்தீவினுடைய ஆளுங்கட்சியின் மூத்த தலைவரான ஜாகித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துகளைத் தெரிவித்தார்.

லட்சத்தீவில் பிரதமர் மோடி

‘சுற்றுலா துறையில் நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா… இந்தியர்களால் சுத்தத்தைப் பேண முடியுமா… இந்திய சுற்றுலா நகர அறைகளின் தூர்நாற்றமே, அந்த நாட்டின் சுற்றுலாத் துறையைப் படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்’ என்று ஜாகித் ரமீஸ் தனது பதிவில் கூறியிருந்தார். இந்தப் பதிவுகளுக்கு எதிராக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து, மாலத்தீவு அமைச்சர்கள் தங்கள் பதிவுகளை நீக்கிவிட்டனர்.

ஆனாலும், இந்த விவகாரம் மாலத்தீவு அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி பற்றி இழிவாகப் பதிவிட்ட மூன்று அமைச்சர்களையும் அந்நாட்டு அரசு தற்காலிகப் பதவிநீக்கம் செய்திருக்கிறது. அத்தோடு பிரச்னை முடிந்துவிடவில்லை. மாலத்தீவு அமைச்சர்களின் இழிவான கருத்துகள் குறித்து மாலத்தீவு அரசிடம் இந்தியா கேள்வி எழுப்பியிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் இழிவான பதிவுகளை, தனிப்பட்ட கருத்து என்ற ரீதியில் ஒதுங்கிக்கொள்ள மாலத்தீவு அரசு முயல்கிறது.

பிரதமர் மோடி

இதற்கிடையில், ஏராளமான இந்தியர்கள் மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இதனால், மாலத்தீவுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏராளமான ஹோட்டல் முன்பதிவுகளும் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இதனால், மாலத்தீவு நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவருகிறது.

இந்தியர்கள் விரும்பி சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளில் மாலத்தீவு முதன்மையானது. கடந்த டிசம்பரில் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஏராளமானோர் மாலத்தீவு பயணத்தை ரத்துசெய்திருப்பதால், அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்ந்த பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

லட்சத்தீவு

மாலத்தீவுக்குச் செல்வதற்கு பதிலாக, லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லுமாறு திரைக்கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும், அரசியல் பிரபலங்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டுவருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.