சிவகாசி: கோட்ட அளவில் நடத்தப்படும் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு பதிலும் இல்லை, தீர்வும் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர்கள் வடிவேல், ராமசந்திரன், முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
- அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கண்மாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்காக பிள்ளையார் குளம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு அதிகமான மண் எடுக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- ஆர்டிஓ: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஞானகுரு, மம்சாபுரம்: வாகைகுளம் ஊருணியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இடையன்குளம் செல்லும் ரோடு சேரமடைந்து உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- கணேசன், ஈஞ்சார்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் சோளம் குதிரைவாலி உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூறுகையில் ராஜபாளையம், தேவதானம், வத்திராயிருப்பு, கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கூட்டத்திற்கு விவசாயிகள் வருகின்றனர். குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அடுத்த கூட்டத்தில் பதில் தெரிவிக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு பதிலோ, தீர்வோ கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றனர். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் 13 கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.