வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரியாத்: சவுதி அரேபியாவில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்கு ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளனர். அங்கு ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் கையெழுத்து போட்டனர்.
பிறகு, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவுக்கும், திங்கள் கிழமை ஸ்மிருதி இரானி சென்றார். அங்கு வுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரும், மெக்கா மசூதியின் துணை கவர்னருமான சவுத் பின் மஷால் பின் அப்துல் அஜீசுடன் நேற்று ஸ்மிருதி இரானி ஆலோசனை மேற்கொண்டார். ஹஜ், உம்ரா பயணங்களின் போது இந்தியப் பயணிகளுக்குத் தேவையான சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சவுதி அரசு அதிகாரிகள், ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
தொடர்ந்து மதினாவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், மதினாவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டேன். அல் மஸ்ஜிதுன் நபவி மசூதி, உஹுத் மலை, இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதியான குபா மசூதிக்கும் சென்றேன்.
ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றோடு பின்னிப் பிணைந்த சவூதி அதிகாரிகளின் மரியாதையுடன் இந்த இடங்களுக்கு சென்றதன் முக்கியத்துவம், நமது கலாச்சார மற்றும் ஆன்மீக ஈடுபாட்டின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
இதனை பார்த்து, நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement