காத்மாண்டு: பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். கடந்த டிசம்பர் 29-ம் தேதி காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது.
23 வயதான சந்தீப் லாமிச்சேன் மீது கடந்த 2022-ல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. தொடர்ந்து ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நேபாள கிரிக்கெட் சங்கம் அவரை இடைநீக்கம் செய்தது. கடந்த 2023 ஜனவரியில் அவர் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில், தற்போது அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை மட்டுமல்லாது அவரது செயலுக்காக ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் லாமிச்சேனின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை லாமிச்சேன் தொடர்ந்து மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.