குவாயாகில், ஈக்வடார் நாட்டில், செய்தி தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பின்போது, அரங்கத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய கும்பல், செய்தியாளர்கள் மற்றும் நிலைய ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் நேரலையில் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், ‘கார்டல்’ என்றழைக்கப்படும், போதை பொருள் கடத்தல் கும்பல்களின் அட்டூழியம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
அதிரடி நடவடிக்கை
அரசு, போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் இஷ்டம் போல இவர்கள் ஆட்டம் போட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஈக்வடார் அதிபராக, டேனியல் நோபோ என்பவர் கடந்தாண்டு நவம்பரில் பதவி ஏற்றார். போதை பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், நாட்டில் வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்து விடத் துவங்கின. கடந்த 8ம் தேதி முதல் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
‘லாஸ் சோனராஸ்’ என்றழைக்கப்படும் போதை கடத்தல் கும்பலின் தலைவர் அடால்ப் மாசியாஸ் கடந்த 8ம் தேதியன்று சிறையில் இருந்து தப்பினார். இதை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்தன.
இந்நிலையில், குவாயாகில் நகரில் உள்ள, ‘டிசி டெலிவிஷன்’ என்ற செய்தி தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு நேற்று முன்தினம் நடந்து வந்தது. அப்போது, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, அரங்கத்திற்குள் நுழைந்து செய்தியாளர்களையும், நிலைய ஊழியர்களையும் துப்பாக்கி காட்டி மிரட்டி கேமரா முன் தரையில் அமர செய்தது.
‘நீங்கள் நேரலையில் உள்ளீர்கள். மாபியாக்களுடன் விளையாட கூடாது என்பது உங்களுக்கு தெரியும்’ என, அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
13 பேர் கைது
இந்த காட்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. 15 நிமிடங்களுக்கு பின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்த போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு பின் அமைச்சரவையை கூட்டிய அதிபர் டேனியல் நோபோ, ஈக்வடாரில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் 20 கும்பலை பயங்கரவாத குழுக்களாக அறிவித்தார். அந்நாட்டில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்