அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் `அன்னபூரணி’.
இப்படத்தில் மாமிசத்தின் பக்கத்தில் நிற்பதுகூட பாவம் என்கிற ஸ்ரீரங்கத்து ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த அன்னபூரணி (நயன்தாரா), ‘கார்ப்பரேட் செஃப்’ ஆக வேண்டும் என்ற தன் கனவை சாத்தியப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது இப்படம். இதில் அசைவம் சமைப்பதில் நயன்தாராவிற்குப் பல சிக்கல்கள் வருகின்றன.

நயன்தாராவை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் ஜெய், “ராமர் கூட அசைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறார்” என்று கூறுவார். இந்த வசனம்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்து அர்ச்சகரின் மகளாக இருக்கும் நயன்தாரா நமாஸ் செய்வது போன்ற காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இவை இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாக ‘விஷ்வ இந்து பரிஷத்’ உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பைக் காவல் துறையில் புகாரும் அளித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த ‘அன்னபூரணி’ திரைப்படம் இன்று நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை ‘விஷ்வ இந்து பரிஷத்’ அமைப்பிற்கு மன்னிப்புக்கோரி கடிதம் அனுப்பியுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ‘Zee Entertaiment Enterprise’ நிறுவனம், “உங்களின் புகார்களைக் கருத்தில் கொண்டு ‘Netflix’ ஓடிடி தளத்திலிருந்து ‘அன்னபூரணி’ படத்தை உடனே நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். சமந்தப்பட்டக் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கிய பிறகு படம் ஒளிபரப்பாகும்.

இந்து மத உணர்வுகளையும், பிராமண சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் இப்படத்தை எடுக்கவில்லை. எந்த வகையிலேனும் உங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் எங்களின் மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்”என்று தெரிவித்திருக்கிறது.