போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2023-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.

இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் போராட்டம் நடத்திய சூழலில் அதனை கைவிடுத்து பணிக்கு திரும்பியுள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து பேருந்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.