போபால் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள அன்னபூரணி தமிழ் திரைப்படத்தில், ஹிந்து கடவுள் ராமரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி, மத்திய பிரதேசத்தில் ஹிந்து அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் கடந்த ஆண்டு டிச., 1ம் தேதி திரையரங்கில் வெளியானது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் ஓ.டி.டி., எனும் இணையம் வாயிலான ஒளிபரப்பில் இடம்பெற்றது.
இந்நிலையில் அன்னபூரணி திரைப்படம் ஹிந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையிலும் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து சேவா பரிஷத் அமைப்பு, அன்னபூரணி படத்தில் நடித்த நயன்தாரா, படத்தின் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் ‘நெட்பிளிக்ஸ் இந்தியா’ ஓ.டி.டி., நிறுவனம் மீது ஜபல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்னபூரணி படத்தில் கோவில் அர்ச்சகர் மகளாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு காட்சியில் ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்துவிட்டு, பிரியாணி செய்கிறார்.
மற்றொரு காட்சியில் நயன்தாராவின் நண்பர், ‘ராமரும், சீதையுமே இறைச்சி சாப்பிட்டு உள்ளனர்’ என கூறி, இறைச்சியை வெட்டுவதற்கு மூளைச் சலவை செய்கிறார்.
இந்த திரைப்படம் ராமரை இழிவுபடுத்துவதுடன், ‘லவ் ஜிஹாத்’ எனப்படும், ஹிந்து பெண்களை முஸ்லிமாக மதமாற்றி திருமணம் செய்யும் நடைமுறையை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஜபல்பூர் போலீசார் நடிகை நயன்தாரா உட்பட அன்னபூரணி படக்குழுவினர் மீது வழக்கு பதிந்து உள்ளனர். முன்னதாக, மும்பை போலீசிலும் நயன்தாரா மீது புகார் அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement