குழந்தை நட்சத்திரமாகும் மோகன் பாபுவின் பேரன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபு. ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இவரது மகன்கள் மனோஜ் மஞ்சு, விஷ்ணு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகிறார்கள். படங்களை தயாரித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் விஷ்ணு மஞ்சுவின் மகனும், மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, கண்ணப்பா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை படமாக இது உருவாகி வருகிறது. சுமார் 100 கோடி செலவில் பான் இந்தியா படமாக இதனை மோகன் பாபு தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நியூசிலாந்தில் 90 நாட்கள் நடந்தது. இதில் கண்ணப்ப நாயனாராக விஷ்ணு மஞ்சுவும், அவரது மனைவியாக பிரீத்தி முகுந்தனும் நடிக்கிறார்கள். மோகன்லால், பிரபாஸ், சரத்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் மகன் நடிப்பது குறித்து விஷ்ணு மஞ்சு கூறும்போது “என் மகன் 'கண்ணப்பா' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாவது பெருமைக்குரியது. என்னை பொருத்தவரை 'கண்ணப்பா' வெறும் திரைப்படம் அல்ல, என் கனவு, என் லட்சியம் மற்றும் என் மனதில் இருக்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான படைப்பு. இப்படி ஒரு படைப்பில் என் மகனின் அறிமுகம் என்பது, எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறையின் சினிமா பயணத்தின் சங்கமம். அவ்ராமுடன் இந்த சினிமா பயணத்தைத் தொடங்குகிறேன், அனைத்து திரைப்பட ஆர்வலர்களின் ஆசீர்வாதத்தை பணிவுடன் பெறுகிறேன். படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் 'கண்ணப்பா' ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருப்பதோடு, எங்கள் குடும்பத்தின் சினிமா சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் இருக்கும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.