சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய 7 தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது சுப. வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது பி.சண்முகத்துக்கும் வழங்கப்பட்டது.
தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பாலமுருகனடிமை சுவாமிக்கும், 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் ம. முத்தரசுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா.கருணாநிதிக்கும் தமிழக முதல்வர் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவரும், தந்தை பெரியாரின் பற்றாளருமான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப. வீரபாண்டியனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பி.சண்முகத்துக்கும் வழங்கி முதல்வர் சிறப்பித்தார்.
இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.