
பில்கிஸ் பானு கதையை படமாக்க நான் தயார் : கங்கனா அறிவிப்பு
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பதிவிடுவார். குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிடுவார். இந்த நிலையில் குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கங்கனா எந்த கருத்தும் கூறாமல் இருந்தார். அதோடு பில்கிஸ் பானு கதையை படமாக எடுக்கும் தைரியம் உள்ளதா என்றும் இணைய தளங்களில் அவரை கேட்டு வந்தனர். இதுகுறித்து கங்கனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் பில்கிஸ் பானு கதையை படமாக எடுக்க விரும்புகிறேன். கதையும் ரெடியாக உள்ளது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளேன். ஆனால் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் சில நிறுவனங்கள் அரசியல் ரீதியிலான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என்று எனக்கு பதில் எழுதியுள்ளனர்.
அதுமட்டுமின்றி நான் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று ஜியோ சினிமா கூறிவிட்டது. ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?. என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.