Departed from Pandalam Thiruvaparana Bhavani tomorrow Makarajyothi darshan | பந்தளத்திலிருந்து புறப்பட்டது திருவாபரண பவனி நாளை மகரஜோதி தரிசனம்

சபரிமலை:நாளை மகரஜோதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பேடகங்களின் பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரஜோதி காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை மகர ஜோதி பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

மகரஜோதி நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது.

அந்த அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்ததாகவும், சபரிமலை சென்ற பின்னர் ஐயப்பனை காண பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றதாகவும், அதை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாகவும் வரலாறு கூறுகிறது.

பந்தளம் மன்னர் குடும்பத்தில் மூதாட்டியின் மரணம் காரணமாக அரண்மனையில் இருந்து எடுக்கப்பட்ட திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு செல்லப்படாமல் சுத்தி கலசம் செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டது.

இங்கு பேடகங்கள் திறக்கப்படாமல் பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கியது.

பவனி புறப்பட்டது

மதியம் 1:00 மணிக்கு சரணகோஷங்கள் முழங்க திருவாபரணபவனி புறப்பட்டது. முக்கிய திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். தொடர்ந்து இரண்டு பெட்டிகள் வந்தது. 25 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர்.

நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. இன்று ளாகா சத்திரத்தில் தங்கும் திருவாபரணம் நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், மாலை 6:25 மணிக்கு சன்னிதானத்திற்கும் வந்து சேரும். காட்டுப்பாதையில் திருவாபரணங்கள் செல்வதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வருகின்றனர்.

மகரஜோதிக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்திகிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலையில் தீபாராதனைக்கு பின்னர் பிராசாத சுத்தி கிரியைகள் நடந்தது. பிம்பசுத்திபூஜைகள் இன்று நடக்கிறது.

இதன் பின்னர் ஐயப்பனின் விக்ரகத்தில் கலசாபிஷேகம் நடைபெறும் என்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கூறினார். ஜன.16 முதல் ஜன. 19 வரை நெய்யபிேஷகம் தவிர்த்த நேரங்களில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம்.

மகரஜோதி நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கேரள போலீஸ் டி.ஜி.பி., ஷேக் தர்வேஷ் சாகிப் , நிலக்கல் பம்பை சன்னிதானத்தில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் பாதுகாப்பு தொடர்பாக பம்பை மற்றும்சன்னிதானத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன்அவர் ஆலோசனை நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.