அயோத்தி ராமர் கோவில் 74 சதவீத முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியே; ஆய்வில் தகவல்

புதுடெல்லி,

குஜராத்தில் உள்ள ஆயுர்வேத தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், தேசியவாத முஸ்லிம் அமைப்புகளில் ஒன்றான முஸ்லிம் ராஷ்டீரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) என்ற அமைப்பு, நாட்டிலுள்ள முஸ்லிம்களிடம் மிக பெரிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு மூலையிலும் கடவுள் ராமர் இருக்கிறார் என்றும் இந்தியாவின் மிக வெற்றிப்பெற்ற பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார் என்றும் அவருடைய வார்த்தைகளை இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கேட்கிறது. ஏற்று கொள்ளவும் செய்கிறது என்றும் எம்.ஆர்.எம். குறிப்பிட்டு உள்ளது.

இந்த ஆய்வின்போது, எண்ணற்ற முஸ்லிம்கள் ஜெய் ஸ்ரீராம் என வெளிப்படையாகவே கூறினர். இந்த ஆய்வில் தெரிய வந்த மற்றொரு விசயம், இஸ்லாம் பெயரில் தங்களுடைய அரசியல் அதிர்ஷ்டங்களை ஈட்ட முயற்சிக்கும் உலமாக்கள், மவுலானாக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் எம்.ஆர்.எம். வெளியிட்ட ஆய்வு குறிப்பிட்டு உள்ளது.

ஆய்வு முடிவின்படி, ராமர் கோவில் எழுப்பியதில் 74 சதவீத முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர் என்றும், மோடி அரசை 70 சதவீத முஸ்லிம்கள் நம்புகின்றனர் என்றும் தெரிய வருகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு எந்த விவகாரமும் இல்லை என்று 72 சதவீத முஸ்லிம்கள் ஒப்பு கொள்கின்றனர். உலக சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று 70 சதவீத முஸ்லிம்கள் உணர்கின்றனர் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது. மோடி அரசின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் மோடி அரசில் அனைவருக்கான வளர்ச்சியில் சம வாய்ப்பானது உள்ளது என்றும் அந்த அமைப்பு ஆய்வில் குறிப்பிட்டு உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் பற்றிய முஸ்லிம் சமூகத்தினரின் பார்வையை பற்றி குறிப்பிடும்போது, இந்துக்களுக்கான நம்பிக்கையின் மையம் ஆக அயோத்தி ராமர் கோவில் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் தொகையின் நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கழிவறை கட்டுமானம், உஜ்வாலா யோஜனா, இலவச ரேசன் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டங்களால் முஸ்லிம்கள் பயனடைந்து உள்ளனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆய்வில், நாட்டில் அடிப்படைவாதம் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பெருமளவிலான பிரிவினர் நம்புகின்றனர். அமைதி மற்றும் வன்முறையின்றி, வளர்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் நாடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.