லண்டன், பிரிட்டனில், 12 வயது பள்ளி சிறுமி மீது காரில் மோதி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி டாக்டருக்கு, 1.41 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டுஷயர் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சாந்தி சந்திரன் வசித்து வருகிறார்.
கடந்த 2018, ஜனவரியில், தன் சொகுசு காரை ஓட்டி சென்ற போது, போக்குவரத்து சிக்னல் பச்சை விளக்கில் இருந்ததால், டாக்டர் சாந்தி சற்று வேகமாக காரை ஓட்டினார்.
அப்போது, அவ்வழியாக வந்த 12 வயது சிறுமி, திடீரென சாலையை கடக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத டாக்டர் சாந்தி, அச்சிறுமி மீது வேகமாக காரை மோதினார்.
இதில் துாக்கி வீசப்பட்ட சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன், அவரது கழுத்து எலும்பும் முறிந்தது.
உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிரகிக்கும் தன்மையை இழந்ததுடன், மனநல பிரச்னைக்கும் ஆளானார். சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அஜாக்கிரதையாக காரை ஓட்டிய டாக்டர் சாந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆறு ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கு விசாரணையில், சமீபத்தில் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அதில், ‘டாக்டர் சாந்தி, வாகனத்தை வேகமாக இயக்காமல் இருந்திருந்தால், விபத்து நிகழ்ந்திருக்காது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1.41 கோடி ரூபாயை டாக்டர் சாந்தி அளிக்க வேண்டும்’ என தீர்ப்பளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்