பாலியல் குற்றவாளி குர்மீத் ராமுக்கு 50 நாட்கள் பரோல் – இரு மாதங்களுக்குள் சலுகை!

ஹரியாணா: பாலியல் வன்கொடுமை – கொலைக் குற்றத்துக்காக கைதான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நவம்பர் 21, 2023-ல் அவருக்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாய்க்கு உடல்நிலை சரியில்லை, தனக்கு உடல்நிலை சரியில்லை எனப் பல்வேறு காரணங்களைக் கூறி பலமுறை பரோல் பெற்றிருக்கிறார்.

யார் இந்த குர்மீத்? – ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கெனவே ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால், ரஞ்சித்தை சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில், குர்மீத் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் பல முறை பரோல் பெற்றுவிட்டார். ஹரியாணா மாநில சிறை நன்னடத்தை விதிகளின்படி குற்றவாளிகளுக்கு பரோல் வழங்க வழிவகை இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைதாபவர்களை பரோலில் விட அனுமதியில்லை. இருப்பினும் குர்மீத் சிங் மட்டும் அடிக்கடி பரோலில் வெளியாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.