புதுடெல்லி: வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: பிப்ரவரி 4 முதல் 11-ம் தேதி வரை நாடு முழுவதும் 7 லட்சம் கிராமங்களில் பாஜக தொண்டர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள னர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பிறகு பாஜக மூத்த தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். பாஜக மூத்த நிர்வாகிகள் தொகுதிவாரியாக பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள்.
எட்டு மக்களவைத் தொகுதிகளின் பொறுப்பாளராக பாஜகமூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த 8 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம், வாகன பேரணிக்கு ஏற்பாடு செய் யப்படும்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு தேசிய அளவிலான பிரச்சாரபொறுப்பை ஏற்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மூத்த தலைவர் ஒருவர் தேர்தல் பிரச்சார பொறுப்பாளராக நியமிக் கப்படுவார்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர மாநிலங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
வரும் மக்களவைத் தேர்தலில்பெண்கள், இளைய தலைமுறையினரை ஈர்க்க புதிய உத்திகள்வகுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் விரும்பப்படும் பிரபலங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.
விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இளைஞர்கள் நலன், முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த கையேடுகள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும். பிரதமர் மோடி நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்வார். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.