கீவ் : உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டனர்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
இரு தரப்பினருக்குமான சண்டையில் பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்கிறது.
இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அங்கு பதிலடி தாக்குதலை உக்ரைன் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 25 பேர் கொல்லப்பட்டனர்; குழந்தைகள் உட்பட படுகாயங்களுடன் போராடிய 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரஷ்யாவின் உஸ்ட்லுகா துறைமுகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான ‘நோவாடெக்’ நடத்தும் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு எரிவாயு தொட்டிகள் வெடித்து சிதறின. உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், அப்பகுதி முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement