‛என் வருத்தம் ராமருக்கு மட்டுமே தெரியும்' ; அயோத்தி விழாவை மிஸ் பண்ணும் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்

நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.,22) வெகு கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நாடெங்கிலும் இருந்து பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரையுலகையைச் சேர்ந்த ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கிளம்பி சென்று கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த வருடம் காஷ்மீர் பைல்ஸ் என்கிற படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமான இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி, படத்தின் காரணமாக மத்திய அரசுக்கும் நெருக்கமானார். அவருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தின் அலுவலகத்தில் இருந்து பலமுறை அவருக்கு நினைவூட்டல் செய்யப்பட்டு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விழாவில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் விவேக் அக்னிகோத்ரி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விழா நடக்கும் அன்று நான் இந்தியாவிலேயே இருக்க மாட்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள இயலாது. அதனால் நான் படுகின்ற வருத்தம் அந்த கடவுள் ராமருக்கு மட்டுமே தெரியும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.