கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள இடையாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு நான்கு மற்றும் ஏழு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மஞ்சுளா இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் தன் விவரங்களை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் சொக்கனந்தல் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (34) என்பவர் தான் இன்ஜீனியரிங் படித்திருப்பதாக தன்னை மஞ்சுளாவிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அத்துடன் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருவதாகவும், தங்கள் விபரங்களை மேட்ரிமோனியில் பார்த்ததாக போனில் பேசியிருக்கிறார். “என் மனைவி விபத்தில் இறந்து விட்டார். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக பெண் பார்த்து கொண்டிருந்தேன். உங்கள் போட்டோவை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது. எனக்கு பணம், நகை தேவையில்லை பணத்துக்கு எந்த குறையும் இல்லை. என்னை திருமணம் செய்து கொள்கின்ற பெண் நல்ல குணமுடன் இருந்தால் போதும் அது உங்களிடம் இருக்கிறது” என மஞ்சுளாவிடம் பேசியுள்ளார்.
இதை உண்மை என நம்பி சக்கரவர்த்தியிடம் பழகியிருக்கிறார் மஞ்சுளா. பின்னர், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, கும்பகோணம் வந்த சக்கரவர்த்தி, ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அப்போது மஞ்சுளாவை வர வைத்து மூன்று மாதம் கழித்து திருமணம் செய்துக்கொள்ளுவதாகவும், உன்னையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார். ஆசை வார்த்தைகளை கூறி மஞ்சுளாவுடன் நெருங்கி இருந்துள்ளார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டும் அவரசமாக பணம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். தனக்கு கணவர் ஆகப்போகிறவர் கேட்கிறார் என்கிற நம்பிக்கையில் ரூ.28 லட்சம், 14 சவரன் நகை மற்றும் தன்னுடைய ஐபோன் ஆகியவற்றை மஞ்சுளா சக்கரவர்த்தியிடம் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து மஞ்சுளாவிடம் பேசுவதை சக்கரவர்த்தி நிறுத்திக்கொண்டார். அதன் பிறகு சந்தேகம் அடைந்த தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த மஞ்சுளா கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருவிடைமருதுார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை தேடிவந்தனர். இந்நிலையில் வெளிமாநிலம் ஒன்றில் தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை திருவிடைமருதூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடமிருந்து 15 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம், செல்போன், சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், “12ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் சக்கரவர்த்தி, தன்னை ஒரு இன்ஜீனியர் என கூறிக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி நகை, பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அந்த பணத்தில் சொகுசு கார், நட்சத்திர விடுதியில் தங்குவது, பெண்களிடன் உல்லாசமாக இருப்பது என சொகுசாக வாழ்ந்துள்ளார்.

மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்திருக்கிறோம். சக்கரவர்த்தி மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் இருப்பதாக தெரிகிறது. அவருடைய செல்போனில் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ உள்ளதால் பல பெண்களை அவர் ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY