Sri Ram Genma Bhumi Riaz Mandir Nirman Kariyalaya | ஸ்ரீ ராம் ஜென்மா பூமி ரியாஸ் மந்திர்நிர்மாண் காரியாலாய

‘ஸ்ரீ ராம் ஜென்மா பூமி ரியாஸ் மந்திர்நிர்மாண் காரியாலாய’ என்று ஹிந்தியில் வரவேற்கும் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான இடத்தை பொதுவாக கார்சலா என்று அழைக்கின்றனர்; அப்படிச் சொன்னால்தான் ஆட்டோ ஒட்டுபவர் இந்த இடத்தில் கொண்டு போய் விடுகிறார். இந்த இடம் இப்போது ராமர் கோவில் அமையுமிடத்திற்கு, 3 கி.மீ., துாரத்தில் உள்ளது.

ராம ஜென்மபூமி கோவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது, 235 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்டதாக கோவில் அமையும்.

கட்டுமானப் பணி முழுமையடைந்தவுடன் இராமர் கோவில் வளாகம், உலகின் மூன்றாவது பெரிய ஹிந்து ஆலயமாக இருக்கும். இது வட மாநில கோவில் கட்டடக்கலையின் சாளுக்கிய- குஜராத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் பிரதான அமைப்பு, ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும். இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்களைக் கொண்டிருக்கும்.

கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் இருக்கும். கட்டடத்தில் மொத்தம், 366 துாண்கள் இருக்கும். சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் 10 தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் சிலைகளாக இருக்கும். படிக்கட்டுகளின் அகலம் 16 அடியாக இருக்கும்.

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களின் வடிவமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேதங்களின்படி, கருவறை எண்கோண வடிவில் இருக்கும். ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம், கல்வி வசதி மற்றும் அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாகவும் இருக்கும்.

இந்த மண்டபத்தையும், துாண்களையும், உள்பிராகாரங்களையும், சுவர்களையும், கூரைகளையும், முகப்பு அலங்காரங்களையும் உருவாக்கும் பணியில் 5,000க்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்னர்.

ராமர் கோவிலுக்கு தேவையான இத்தனை விஷயங்களும் இன்று நேற்று நடப்பதல்ல; கடந்த 1990 ஆகஸ்ட் 30 அன்று அயோத்தியில் ஏற்படுத்தப்பட்ட ‘மந்திர் நிர்மான் காரியசாலா நியாஸால்’ அமைக்கப்பால் துவக்கி நடத்தப்பட்டு வருகிறது.

அப்போதெல்லாம் இப்படி ஒரு ராமர் கோவில் வரும் என்பதில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய தலைவர் அசோக் சிங்கால் மற்றும் ராம்தீர்த்த அறக்கட்டளை தலைவர் சம்பத்ராய் போன்ற தலைவர்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.

இது குறித்து சம்பத் ராய் கூறியதாவது:

ராஜஸ்தானில் இருந்து பன்சி பஹர்பூர் கற்கள், கடந்த 1992 மற்றும் 1998 க்கு இடையில் காரியசாலாவிற்கு வந்துகொண்டே இருந்தன. வந்த கற்களை வைத்து துாண்கள் செய்யும் பணி நடந்து கொண்டே இருந்தது. நாடு முழுவதும் இருந்து வந்த செங்கற்கள் வாங்கி வைக்கப்பட்டன. ராமரின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான 54 சம்பவங்களை சிற்பங்களாக உருவாக்கும் பணியும் நடந்து கொண்டே இருந்தது.

இளைஞர்களாக இங்கே பணியாற்ற வந்தவர்கள் பலர் நடுத்தர வயதை கடந்து விட்டனர்.

இங்கே நடைபெறும் வேலைகளை பார்க்க வருபவர்கள் மனதில் ஒரு பக்கம் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு வேலைகள் நடப்பது சந்தோஷத்தைக் கொடுத்தாலும், எந்த நம்பிக்கையில் இவ்வளவு வேலைகள் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் கொடுத்தது.

அவர்கள் அனைவருக்கும் நாங்கள் கொடுத்த பதில், ராமர் மீதான நம்பிக்கையால்தான் இவ்வளவும் செய்கிறோம் என்பதாகும்.

இதோ, 30 ஆண்டுகள் கழித்து எங்கள் நம்பிக்கையை ராமபிரான் அருளால் கைகூடியுள்ளது.

பூமி பூஜை நடத்திய இரண்டு ஆண்டுகளில், எப்படி இவ்வளவு பெரிய கோவிலை நிர்மாணித்தனர் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்; அவர்களுக்கு தெரியாது; இதற்கான உழைப்பு இங்கே, 30 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு நடந்து கொண்டிருந்தது என்று.

வீடு கட்டுவது போல கோவிலைக் கட்டவில்லை. எப்படி பாலம் கட்டும் போது கற்களை ஒரு இடத்தில் தயார் செய்த, பின் ஒன்று சேர்ப்பரோ, அது போல கோவில் கட்டுமானங்கள் அனைத்தையும் நாங்கள் இங்கே தயார் செய்து தை்திருந்தோம. உத்தரவு கிடைத்ததும் திட்டமிட்டபடி துாண்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கிரேன் மூலம் எடுத்துச் சென்று கோவிலை எழுப்பி வருகிறோம்.

உங்கள் பார்வைக்கு எல்லாமே ஒரே மாதிரியாகத் தோன்றும். ஆனால் நாங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு, ‘கோடு வேர்டு’ கொடுத்துள்ளோம்; அதன்படி பொருத்தும் போது கச்சிதமாக பொருந்திவிடும்.

எளிதாக சொல்லிவிட்டோம்; ஆனால் இந்த கட்டுமானம், 1,000 ஆண்டுகளானாலும் அப்படியே இருக்கும். எந்த பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் வந்தாலும் நிமிர்ந்து நிற்கும். அப்படி ஒரு சக்தி, இந்த கோவில் கட்டுமானத்திற்கு உண்டு.

நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்திற்கு வந்திருந்தால் நிற்கக்கூட இடமில்லாமல் நெருக்கடியில் நின்று கொண்டுதான் வேலை பார்த்தோம். இப்போது பாதிக்கு மேல் இங்கிருந்த பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோவிலாக உருவெடுத்துவிட்டது.

இன்னும் பாதி வேலை உள்ளது. இந்த வேலைகள் அனைத்தையும் நாங்கள் பெரும்பாலும் கையால்தான் செய்கிறோம் என்பதும் முக்கியம். எங்கள் உழைப்பு எந்த அளவு உயிர்ப்பு பெற்றுள்ளது என்பதை கோவில் திறந்தபின், மக்கள் பார்த்து புரிந்து கொள்வர்.

எப்படி வீடு கட்டும் போது ஒரு நல்ல நாளில் கிரகப்பிரவேசம் செய்துவிட்டு பிறகும் வேலைகளைத் தொடர்வரோ, அது போல ராமர் கோவில் கும்பாபிசேஷகத்திற்கு பிறகும் செய்யவேண்டிய வேலைகள் நிறையவே இருக்கிறது அதை எல்லாம் முடித்துப் பார்க்கும் போது ராமர் கோவில் உலகின் மிகச்சிறந்த கோவிலாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.