392 தூண்கள், 44 கதவுகள், 5 மண்டபங்கள்; அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பின் சிறப்பம்சங்கள் என்ன?

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. மேலும் அயோத்தியில் பிரபலங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு காணலாம்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி கோயிலை திறந்து வைக்கிறார். இதற்காக கடந்த 16ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. இதையொட்டி, இன்று நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு காணலாம்:

  • அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலானது பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டடுள்ளது. அதன் நீளம் 380 அடி (கிழக்கு-மேற்கு), உயரம் 161 அடி கொண்டதாகும்.
  • ராமர் கோயிலானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. இதில் மொத்தம் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளன.
  • கோயிலின் பிரதான கருவறையில் பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலையும், முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளது.
  • கோயிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிராத்தன மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளன.
  • கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோயிலுக்குள் நுழையலாம்.
  • கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி தேவி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. வடக்குப் பகுதியில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்குப் புறத்தில் அனுமன் ஆலயமும் உள்ளன.
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக கோயிலில் சாய்வுதளம் மற்றும் லிப்ட்கள் உள்ளன.
  • கோயிலை சுற்றிலும் 732 மீட்டர் நீளமும், 14 அடி அகலமும் கொண்ட செவ்வக வடிவ சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
  • கோயிலுக்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க பழங்காலத்து கிணறு (சீதா கூப்) ஒன்று இருக்கிறது.
  • கோயிலின் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இது ஒரு தனித்துவமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக பாரம்பரிய கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
  • பிரதான கோயில் கட்டமைப்பில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அஸ்திவாரங்களில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரானைட்டின் பயன்பாடு, கோயிலின் ஒட்டுமொத்த ஆயுளுக்கும் வலிமையை சேர்க்கிறது.
  • கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர்- காம்பாக்ட் (RCC) செய்யப்பட்ட காங்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது.
  • கோயில் வளாகத்தில், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
  • நிலத்தடி ஈரப்பதத்திலிருந்து கோயிலை பாதுகாப்பதற்காக, கிரானைட்டைப் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.
  • கோயில் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீ பாதுகாப்புக்கான நீர் வழங்கல் மற்றும் ஒரு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட யாத்ரீகர்கள் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, யாத்ரீகர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் லாக்கர் வசதி இருக்கும்.
  • கோயில் வளாகத்தில் குளியலறை வசதிகள், கழிப்பறைகள், கைகழுவும் தொட்டிகள் போன்ற வசதிகளும் உள்ளது.
  • கோயில், முற்றிலும் பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • 70 ஏக்கர் பரப்பளவில் 70 சதவீத பசுமையாக இருப்பதால், சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கட்டப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.