Colour-Blind: பார்வை நிற குறைபாடுடையவர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர்களாக நியமனம் – டெல்லி அதிர்ச்சி!

டெல்லியில், பார்வை நிறக் குறைபாடு (நிற வேற்றுமை கண்டறிய முடியாமை) கொண்ட நபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேருந்து ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம், வெளிச்சத்துக்கு வந்த நிலையில், டெல்லி போக்குவரத்து கழகத்தை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரியில் விபத்து காரணமாக பார்வை நிறக் குறைபாடு உடைய பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

டெல்லி போக்குவரத்து கழகம்

இந்த நிலையில் அந்த ஓட்டுநரின் பணி தொடர்பான , டெல்லி போக்குவரத்து கழக மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த சந்திர தாரி சிங், “டெல்லி போக்குவரத்து கழகம், ஒருவரை ஓட்டுநராக பணியமர்த்தும்போது, அந்த நபர் அனைத்து வகையிலும் தகுதியானவரா என்பதை உறுதி செய்வதில், உரிய கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டிருக்க வேண்டும். இது போன்ற செயல்கள் பொது பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையில், அதனைக் கவனத்தில் கொள்ளாமல், போக்குவரத்து கழகம் அந்த ஓட்டுநரை எதற்காக, எந்த சூழலில் பணியமர்த்தியது என்ற உண்மையை, இந்த நீதிமன்றம் இப்போது தெரிவிக்க விரும்புகிறது. குறிப்பாக, இந்த வழக்கில் 2008 முதல் 2011 வரை 3 ஆண்டுகளுக்கு அந்த ஓட்டுநரை பேருந்துகளை இயக்க அனுமதித்தது மிகவும் மோசமானது” என்று கண்டித்தார்.

மேலும் விசாரணையில், ஆள்சேர்ப்பின்போது நிறக் குறைபாடு உடைய ஒருவரை எப்படி ஓட்டுநராக நியமித்தீர்கள் என்று நீதிமன்ற தரப்பில் போக்குவரத்து கழகத்திடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, குருநானக் மருத்துவமனை வழங்கிய மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் இது நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான், 2013-லும் நிறக் குறைபாடு உடையவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இது போன்று பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

டெல்லி உயர் நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து, “விண்ணப்பதாரர் சமர்ப்பித்த மருத்துவச் சான்றிதழை போக்குவரத்து கழகம் நம்பியது தவறான செயல். துரதிஷ்டவசமாக போக்குவரத்துத்துறை, அந்த நபர் பணியமர்த்தப்பட்ட பதவிக்கு மருத்துவரீதியாக அவர் தகுதியானவரா என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதோடு, குருநானக் கண் மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அந்த ஓட்டுநர் உட்பட 100 பேர் மீது போக்குவரத்து கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது” என்று நீதிமன்ற தெரிவித்தது. மேலும், 2008-ல் செய்யப்பட்ட ஆள்சேர்ப்பின் பொறுப்பு அதிகாரிகளின் விவரங்களை அளிக்குமாறு, போக்குவரத்து கழக தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.