புதுடெல்லி: அயோத்தியின் ராமர் கோயிலில் பிரதிஷ்டைக்கு பின் நேற்று முதல் விடியற்காலை 3.30 மணிக்கு ஆரத்தி நடைபெறுகிறது. ராமானந்த சம்பிராதாயத்தின் படி அன்றாடம் ஐந்துவேளை ஆரத்தி தொடர்கிறது.
அயோத்தி கோயிலில் ஜனவரி 16 இல் தொடங்கிய ராமர் சிலைக்கானப் பிராணப் பிரதிஷ்டா நேற்று முன்தினம் முடிந்தது. இந்த விழாவில் முக்கிய விருந்தினராகப் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாலை ஏழு மணி வரை விழாவுக்கு சுமார் 15,000 சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் தரிசனத்தை முடித்தனர். நேற்று விடியலில் ஆரத்திக்கான ஏற்பாடுகள் 3.00 மணிக்கு துவங்கின. பிரதிஷ்டைக்கு பின் முதல் நாளான நேற்று மங்கள ஆரத்தி 3.30 மணிக்கும் பிறகு, 6.30 மணிக்கு சிருங்காரி ஆரத்தியும் நடைபெற்றன.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கருவறையில் உள்ள பாலகர் ராமர் சிலைக்கு பாலும், பழங்களும் படைக்கப்பட்டன. மதியம் 12.30 மணிக்கு போக் (உணவு) ஆரத்தியும், மாலை 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும் நடைபெற்றது. இதுபோல் ராமானந்த சம்பிரதாயத்தின்படி அன்றாடம் ஐந்து வேளை ஆரத்திகள் நடைபெற உள்ளன. பக்தர்களுக்கான தரிசன நேரங்களை ராமர் அறக்கட்டளை சார்பில் ‘ராமோபசேனா’ எனும் பெயரில் வழிகாட்டு முறை வெளியாகி உள்ளது.
இதன்படி, ’காலை 7.00 முதல் 11.30 மணி. பிறகு மதியம் 2 மணி முதல் மாலை 7.00 வரை தொடர்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒருவருக்கு 6 வினாடிகள் மட்டுமே தரிசனம் கிட்டும். இவர்கள் அனைவருமே தங்கள் அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும். தரிசனத்துக்கான நேரம் ஒதுக்க பக்தர்களுக்கு அறக்கட்டளையின் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி வருபவர்கள் அதே நாளிலும் அறக்கட்டளை அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு முன் தரிசன அனுமதி பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.