புதுச்சேரி: ஜிப்மர் இயக்குநருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ஊழியர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் இயக்குநராக பணியாற்றி வருபவர் ராகேஷ் அகர்வால். இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்தது. புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் புதிய இயக்குநர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் ராகேஷ் அகர்வாலுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் இயக்குநர் ராகேஷ்அகர்வால் பணிகாலத்திலேயே கடும் எதிர்ப்பு ஊழியர்கள், மருத்துவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை எழுந்தது. ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்து கூட்டம் நடத்தி உத்தரவுகள் பிறப்பித்தும் அதை முழுமையாக அவர் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு தந்துள்ளது அங்கு பணியாற்றுவோர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிப்மர் மருத்துவர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். முதல் நாளான இன்று அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். போராட்டத்தில் முடிவாக ஜிப்மர் நிர்வாக அலுவலகம் எதிராக இவர்கள் இன்று மாலை ஒன்று கூடி தங்களது அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.
ஜிப்மர் ஊழியர்கள் சங்க தலைவர் ஆரோக்கியம் கலைமதி கூறுகையில், “ஜிப்மர் தன்னாட்சி விதிளுக்கு புறம்பாக ராகேஷ் அகர்வாலுக்கு ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனே தலையிட்டு பணி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்” என்றார். ஜிப்மர் பேராசிரியர் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், “ஜிப்மர் இயக்குநராக ராகேஷ் அகர்வால் வந்த பிறகு கல்வித் தரமும் மருத்துவ தரமும் குறைந்து வருகிறது. ஜிப்மருக்கு வேண்டிய மருந்துகள் வாங்குவது, ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவற்றை அவர் தொடர்ந்து தடுத்து வருகிறார்.
ஜிப்மாரின் தரம் தொடர்ந்து குறைவதால், அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யக்கூடாது. ஐந்து ஆண்டுகளாக கடுமையான கஷ்டத்தில் இருந்தோம். மீண்டும் ஒரு ஆண்டு பதவி நீட்டித்தால் மருத்துவர்களால் பணியாற்றவே முடியாது. அனைவரும் மன உளைச்சலில் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில், ஜிப்மர் இயக்குனருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை கண்டித்து தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.