Madhya Pradesh to grow with Modi schemes: Peoples awareness with Sankalp Yatra | மோடி திட்டங்களால் வளரும் மத்திய பிரதேசம்: சங்கல்ப் யாத்திரையால் மக்கள் விழிப்புணர்வு

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில், மத்திய பிரதேச அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும், ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ எனப்படும் ‘நம் லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரத யாத்திரை’ என்ற நிகழ்ச்சி, அம்மாநில மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு நாடு தழுவிய அளவில், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்கள், நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை’ நாடு முழுதும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு நவ., 15ம் தேதி துவக்கி வைத்தார்.

மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயனாளிகளை தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவது இந்த யாத்திரையின் நோக்கம்.

இந்த யாத்திரையை, மத்திய பிரதேச அரசு, மத்திய அரசுடன் இணைந்து, மிக சிறப்பாக நடத்தி வருகிறது. மாநிலம் முழுதும், 370 வாகனங்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளன. யாத்திரை வாகனங்கள், தினசரி காலை, மாலை என, இரண்டு கிராமங்களுக்கு செல்கின்றன.

நகரை ஒட்டியுள்ள கிராமங்கள், ஊரகப் பகுதியில் உள்ள கிராமங்கள், மலைப் பிரதேசத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு செல்கின்றன. வாகனங்கள் செல்லும் கிராமங்களில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மருத்துவ முகாம்

இதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.

மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற விரும்புவோரிடம், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் வழியாக சாதாரண மக்களும் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் கிராம மக்கள் பங்கேற்கின்றனர்.

சுகாதாரத் துறை சார்பில், மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஊட்டச்சத்து அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அரசு திட்டங்களை விளக்கும் குறும்படம், யாத்திரை வாகனத்தில் உள்ள, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது, அம்மாநில மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இதுகுறித்து, மத்திய பிரதேச மாநிலம், போபால் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவிந்த்புரா பகுதியைச் சேர்ந்த பவிதாபிலாலா கூறுகையில், ”விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை, மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

”நான் சுவநிதி திட்டத்தின் கீழ், தையல் வேலை செய்ய, 10,000 ரூபாய் கடனுதவி பெற்றேன். அதை முறையாக செலுத்திய பின், 20,000 ரூபாய் கடன் பெற்றேன்.

வங்கியில் கடன்

”கடனுதவி பெற என்னென்ன ஆவணங்கள் வேண்டும்; எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என, முகாமில் எடுத்துரைக்கின்றனர்,” என்றார்.

நிஷா சாவ்லே என்ற பெண் கூறுகையில், ”பி.எம். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 2.65 லட்சம் ரூபாய் மானியம் பெற்று, வீடு கட்டி உள்ளேன். மீதி பணத்திற்கு வங்கியில் கடன் பெற்றுள்ளேன். பிரதமரின் திட்டத்தால், குடிசை வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்கு மாறி உள்ளேன்,” என்றார்.

மானியம் தருது மத்திய அரசு!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில், சென்னையில் இருந்து, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வரவழைத்து, அவற்றை விவசாயத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, ராய்சென் மாவட்டம், அபிதுல்லா கஞ்ச் தாலுகா, தலைமை செயல் அதிகாரி யுக்தி சர்மா கூறியதாவது:இந்த யாத்திரை, அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய பெரிதும் உதவியாக உள்ளது. கிராம அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இங்குள்ள விவசாயிகள் அதிக அளவில் கோதுமை பயிரிடுகின்றனர். இதுதவிர, கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ் பயிரிடுகின்றனர். விவசாயிகள், ட்ரோன்கள் வழியே உரமிடும் பணியை செய்தால், நேரம், செலவு குறையும். விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ட்ரோன் வாங்க 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதில் 75 சதவீதம் மத்திய அரசு மானியம். இவ்வாறு அவர் கூறினார்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.