புதுடில்லி, ஜன. 28-
மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பான வழக்கில், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், வழக்கை தானே விசாரிப்பதாக உத்தரவிட்டது.
மாணவி வழக்கு
மேற்கு வங்கத்தில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கையில், ஜாதி சான்றிதழ் மோசடியாக வழங்கப்பட்டு, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக, இஷிதா சோரன் என்ற மாணவி வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், கடந்த 24ம் தேதி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சவுமென் சென், உதய்குமார் கங்குலி அமர்வு, அந்த உத்தரவுக்கு 25ம் தேதி தடை விதித்தது.
அன்றைய தினமே, அதை சுயமாக வழக்காக எடுத்து, நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், தனி நீதிபதி அமர்வாக அந்த வழக்கை விசாரித்து, இரண்டு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டார்.
மேலும் தன் உத்தரவில், நீதிபதி சவுமென் சென், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
முறையாக மேல்முறையீடு செய்யப்படாததால், இரண்டு நீதிபதிகள் அந்த வழக்கை விசாரித்தது சரியல்ல என்றும் தன் உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, விடுமுறை தினமாக இருந்தபோதும், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தது.
அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் பிறப்பித்த உத்தரவுகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
விசாரணை
மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கில் எவ்வித விசாரணையும் நடத்தக்கூடாது.
அந்த வழக்கை, உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்.
இது தொடர்பாக, மாநில அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
நீதிபதி கங்கோபாத்யாய், ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவருடைய உறவினரும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி தொடர்பான ஒரு வழக்கை, அவர் கடந்தாண்டு விசாரித்து வந்தார்.
அது தொடர்பான ஒரு வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வும் விசாரித்து வந்தது.
அது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, நீதிபதி கங்கோபாத்யாய் உத்தரவிட்டிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைஅடுத்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்