`துரோகி இருக்கும் இடம் ஒரத்தநாடு' – வைத்திலிங்கத்தைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ஒரத்தநாடு பகுதி என்று சொன்னாலே துரோகி இருக்கின்ற இடம் என்பது உங்களுக்கு தெரியும். அந்த துரோகியை வெல்வதற்குத்தான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலிதா இருக்கின்ற போதே கட்சியில் பல துரோகிகள் இருந்தனர். அவர்கள் அடியோடு அழிந்துபோன வரலாறு உண்டு. அ.தி.மு.க-வை தீய சக்தி தி.மு.க-வோடு இணைந்து அழிக்க நினைக்கின்றவர்கள், அழிந்து போவர்.

அ.தி.மு.க-வினரை யாரும் அடிமைபடுத்த முடியாது, வீழ்த்த முடியாது. நம் எதிரிகளோடு கைகோத்து அ.தி.மு.க-வை அழிக்க நினைத்தார்கள். ஆனால் தர்மம், நீதி, நேர்மை வென்றது. அ.தி.மு.க இரண்டு கோடி தொண்டர்களுக்குச் சொந்தம். நாம் கோயிலாக நினைத்த கட்சித் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை மன்னிக்க முடியாது. இரண்டு கோடி தொண்டர்களுக்கான சொத்தை யாரும் அபகரிக்க முடியாது. தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமான கட்சி கிடையாது அ.தி.மு.க.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வை அழிக்க நினைப்பவர்கள்தான் நம்முடைய முதல் எதிரி. 2016-ல் அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டுப்போட்டனர். அப்படி போட்டவருக்கு உச்ச பதவி கொடுத்து ஆதரித்தோம். அப்போதும் திருந்தாமல் நயவஞ்சக புத்தியோடு செயல்பட்டார்கள். அதனாலேயே அ.தி.மு.க., கரை வேட்டி, கொடி கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அ.தி.மு.க-வை யாராலும் அழிக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.