திக்கற்ற காட்டில் பயணித்த மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்டிற்கு கலங்கரை விளக்கமாக மாறியிருக்கிறார் ஷமர் ஜோசப்.
பிங்க் பால் டெஸ்டில் எந்த அணியிடமும் தோற்றதே இல்லை என்ற நடப்பு டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அதனை நிகழ்த்தியிருப்பது அச்சுறுத்தலை தரும் இந்தியாவோ, ஆஷஸில் சரிநேர் சமானமாக சண்டை செய்யும் இங்கிலாந்தோ அல்ல. மாறாக, 21 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வீழ்த்தியதே இல்லை, அதிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து ஒரு டெஸ்ட் போட்டியை வென்றே 27 ஆண்டுகள் ஆகிவிட்டன எனும் மோசமான டிராக் ரெக்கார்டை உடைய மேற்கிந்தியத்தீவுகள்தான்! இந்த வெற்றித்தேருக்கான சாரதி, ஷமர் ஜோசப்.

அனுபவம் மிகுந்த பௌலர்களுக்குக்கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஸ்பெல்கள் சவால் விடுக்கும். அதிலும் அவர்களது மண்ணில் ஆஸ்திரேலியாவின் பலம் இரட்டிப்பாகும் என்பது தெரிந்த கதைதான். அதனால்தான் அறிமுகத் தொடரில் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவேற்ற வைத்த ஷமரின் ஸ்பெல் சிறப்பானதாய் அடிக்கோடிடப்படுகிறது.
ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை செக்யூரிட்டி கார்டாக, தனது வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என இளம்வயது தோனி போலவே கேள்விகளைச் சுமந்தவர், ஓராண்டுக்கு முன்பு வரை முறையான கிரிக்கெட்டின் பக்கங்களைக்கூட அதிகமாக அறிந்திடாதவர், ஒரு சில மாதங்களுக்கு முன்புகூட கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பிரதான பௌலராக அல்ல, நெட் பௌலராக தனக்கான வாய்ப்புக்காக கண்களில் கனவுகளைத் தேக்கி வைத்து வலம் வந்தவர், பின் வாய்ப்புகள் கூடிவந்திருப்பினும் ஐந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் மட்டுமே ஆடி தனது திறனின் ஆரத்தை அதிகரிப்பதற்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ள வீரர் – இதுதான் ஷமரின் குட்டி ஃப்ளாஷ்பேக்!
இந்தக் காரணங்களால்தான் இத்தொடரில் அறிமுகமான மற்ற மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களில் ஒருவராகவே ஷமர் முதலில் பார்க்கப்பட்டார். முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸே அதனை மாற்றியமைத்தது. எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். வருடக்கணக்காக வெள்ளை ஜெர்ஸியில் ஆடியுள்ள ஸ்மித் ஓப்பனராக இறங்கிய முதல் போட்டியிலேயே ஷமரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அது அதிர்ஷ்டத்தாலோ ஸ்மித்தின் தவறால் மட்டுமோ நேர்ந்து விடவில்லை என்பதை ஷமர் லபுசேனுக்கு வீசிய அந்தப் பந்து நிரூபித்து அவரை வெளியேற்றியது.
சமாளித்து பேக் டு பேக் பவுண்டரி அடித்த க்ரீனுக்கு எதிராக அடுத்த பந்திலேயே கம்பேக் கொடுத்து எக்ஸ்ட்ரா பவுன்ஸில் அவரை இந்த எக்ஸ்பிரஸ் பந்தாடியது. தொடர்ந்து ஸ்டார்க், லயான் ஆகியோர்களையும் முட்டி மோதி வீழ்த்தி அறிமுகப் போட்டியிலேயே அதிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து ஐந்து விக்கெட் ஹாலினை எடுத்து வேறென்ன வேண்டும் என கேட்க வைத்தார் ஷமர்.

இது மட்டுமல்ல முதல் இன்னிங்ஸில் அவர் எடுத்திருந்த 36 ரன்களும் சேர்ந்துதான் அணியின் ஸ்கோரை 188 என ஓரளவு கௌரவமான இடத்திற்கே நகர்த்தியது. ஷமரின் பெயர் சற்றே பேசுபொருளானாலும் அது வீச்சுப்பெருக்கம் அடையாதவாறு மூன்று நாட்களுக்குள் ஆஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகளை சுருட்டியிருந்தது. ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்த அந்த தருணத்துக்கான புகைப்படத்தை பெரிதாக தனது வீட்டில் மாட்டப் போவதாகவும் இதுதான் தனது வாழ்வில் மறக்கவே முடியாத நிமிடங்கள் என்றும் ஷமர் விவரித்திருந்தார். அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள்தானே வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமான பிடிமானமே?! அடுத்த போட்டியிலேயே முன்பை விடவும் அப்டேட்டட் ஸ்பெல் ஒன்றினை வீசி ஷமரின் பந்து சம்பவம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகளை குறைவாக மதிப்பிட்டு டிக்ளேர் செய்யும் முடிவை எடுத்திருந்த முதல் இன்னிங்ஸில் இது நேர்ந்திருந்தால்கூட இது இத்தனை கவனத்தை ஈர்த்திருக்காது. எந்தவித இடைஞ்சலும் இன்றி முழு உடல்தகுதியோடு ஷமர் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த ஸ்பெல்லை வீசி அந்த விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால்கூட அது தலைசிறந்ததாக கொண்டாடப்பட்டிருப்பினும், மறக்கப்பட்டு கடக்கப்பட்டிருக்கும். ஆனால் அவரது முன்னோடி மார்கம் மார்ஷல் இங்கிலாந்துக்கு எதிராக காயம்பட்ட கட்டைவிரலோடு பௌலிங் செய்து 7/53 என்ற அற்புதத்தை நிகழ்த்தினாரே அதனை அப்படியே ஷமர் மீட்டுருவாக்கம் செய்திருப்பதுதான் அவரது எழுச்சியை இன்னமும் செறிவுபடுத்துகிறது.
மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது ஷமரின் காலினை ஸ்டார்க்கின் யார்க்கர் பதம் பார்த்தது. தொடர்ந்து ஆடமுடியாத நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். 216 என்னும் எளிய இலக்கு ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்கப்பட்டதும் இதனால்தான். ஆனால் மேற்கிந்தியத்தீவுகளின் பயம் அது பற்றியதல்ல, அடுத்த நாள் பௌலிங் செய்ய ஷமர் மீண்டு வந்துவிட முடியுமா என்பதுதான்.

போட்டி தொடங்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை கூட அதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. எலும்பு முறிவு இல்லை என்றாலும் சரியாக நடக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையிலேயே ஷமர் மைதானத்தை வலம் வந்தார். இறுதியில் அவர் ஆடுவார் என்ற தகவல் மேற்கிந்தியத்தீவுகள் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. 29-வது ஓவரில்தான் ஷமரினை பிராத்வெய்ட் கொண்டு வந்தார். 93/2 என அதுவரை கூட பாதுகாப்பு வளையத்திற்குள்தான் ஆஸ்திரேலியா பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் புள்ளியில்தான் அவர்களது சரிவும் ஆரம்பித்தது.
பொதுவாக ஆஸ்திரேலியாவின் இறுதி வீரர் வரை நின்று போராடிப் பார்ப்பார்களே ஒழிய அவ்வளவு சுலபமாக சரணடையக் கூடியவர்கள் அல்ல. இப்போட்டியிலும் மற்ற பௌலர்களை அவர்கள் டீல் செய்த விதம் அப்படித்தான் இருந்தது.
ஆனால் ஷமர் விஷயத்தில் அது எடுபடவில்லை. காரணம் அவரது வேகம், அவர்களுக்கு யோசித்து அதற்கேற்ப தங்களது ஷாட்டினைத் தேர்ந்தெடுப்பதற்கான அவகாசத்தை அந்த அதிவேகம்தான் குறைத்தது. தொடக்கத்தில் அவரது வேகம் சற்றே குறைவாகவே இருந்தது. மணிக்கு 130 கிமீ என்ற வேகத்திலேயே தொடங்கினார், லைன் அண்ட் லெந்த் சற்றே அடிவாங்கி ரன்களைக் கசியக்கூட விட்டார். இது காயத்தினால் ஏற்பட்ட பின்னடைவோ எனக்கூட யோசிக்க வைத்தார். ஆனால் அது ஆரம்பத்தில் மட்டும்தான். அவரது இரண்டாவது ஓவரே, பேக் டு பேக் விக்கெட்டுகளாக க்ரீன் மற்றும் ஹெட்டை வெளியேற்றி ப்ரேக் த்ரூவைக் கொடுத்தது.
சற்றே எக்ஸ்ட்ரா பவுன்ஸோடு ஆஃப் ஸ்டம்பைக் குறிவைத்த அந்த Wobble Seam க்ரீனின் விக்கெட்டை வீழ்த்தியதோடு ஷமர் எக்ஸ்பிரஸுக்கு க்ரீன் சிக்னலும் காட்டியது. உண்மையில் அதனை ஆன்டி ராபர்ட்ஸின் இருவித பவுன்சர்களும் ஒன்றாகக் கைகொட்டி பாராட்டியிருக்கும். மணிக்கு 141 கிமீ வேகத்தில் வந்து ஹெட்டின் காலிற்குக் குறிவைத்த அந்த யார்க்கர் எல்லாம் ஜோயல் கார்னரின் யார்க்கர்களையே பெருமிதம் கொள்ள வைத்திருக்கும். மொத்தமாக மடிந்து கிடந்த மேற்கிந்தியத்தீவுகளின் நம்பிக்கையை சற்றே புனர் ஜென்மம் எடுக்க வைத்தன அந்த இரு டெலிவரிகளும். எத்தனை நாள்களாக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தனர் இப்படியொரு நாளுக்காக? உண்மையில், அதன் பிறகு ஸ்மித் தவிர்த்த எந்த ஆஸ்திரேலிய பௌலர்களாலும் இளைப்பாற முடியவில்லை, அதற்கான அவகாசத்தையும் ஷமர் அளிக்கவில்லை.

பந்துக்குப் பந்து வேகம் அதிகரித்தது. இவ்வளவுக்கும் ஓவர்களுக்கு இடைப்பட்ட சமயங்களில் ஷமர் நடக்கவே சிரமப்பட்டு நொண்டுவதைப் பார்க்க முடிந்தது. ஆனால் ரன்னப்பிலோ பந்து வீசும் போது அதன் துல்லியத்திலோ எங்கேயும் தேக்கம் ஏற்படவில்லை. அதே காயத்தோடும் இடைவெளியின்றி ஓவர்களை வீசிக் கொண்டே இருந்தார். மார்ஷுக்கு முன்னதாக வீசிய பவுன்சர் ஆகட்டும் அவரை வீழ்த்திய மணிக்கு 144 கிமீ வேகத்தில் பாய்ந்த அந்த புல்லட் ஆகட்டும் எக்ஸ்ட்ரா பவுன்ஸில் கிடைத்த அட்வான்டேஜை தனக்கான ஆயுதமாக்கிக் கொண்டிருந்தார்.
கேரேவுக்கான அந்த யார்க்கர், காயத்திற்காக ஸ்டார்க்கை பழி தீர்த்து வெளியேற்றிய அந்த ஷார்ட் பால், கம்மின்ஸின் அவுட்சைட் எட்ஜை குசலம் விசாரித்ததோடு முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த முடிவை அவரைப் மறுபரிசீலனை செய்ய வைத்த அந்த பேக் ஆஃப் லெந்த் டெலிவரி, இறுதியில் ஹாசில்வுட்டினை வெளியேற்றி `Mission Accomplished’ என ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அந்த ஃபுல் லெந்த் டெலிவரி என அத்தனையும் ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து வந்திருப்பதுதான் நம்ப முடியாதது.
எப்போதுமே காபா வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரிதான் என்றாலும், அதிகரித்த வெப்பம், காலிற்கு சங்கிலியிடும் காயம் என பலவும் ஷமரை பின்னோக்கி இழுத்தன. ஆனால் ஒவ்வொரு புள்ளியிலும் அவரது திறன் மட்டுமல்ல 11.5 ஓவர்களை காயத்தையும் வலியையும் பொருட்படுத்தாமல் வீசிய மனோபலம்தான் லாராவின் கண்களில் இருந்து கார்ல் ஹூப்பர் கண்கள் வரை பனிக்க வைத்தன, ரிசப் பண்டினையும் கூடவே நினைவூட்டின.

“இறுதி விக்கெட் விழும்வரை எனது ஸ்பெல் இடைவிடாது நீளட்டும்” என கேப்டன் பிராத்வெய்டிடம் அவர் கூறிய வார்த்தைகள் Fire In Babylon காட்சிகளை மறுபடியும் நிழலாட வைத்து விட்டன. `Four Horsemen Of Apocalypse’-ன் சாரங்களை ஆங்காங்கே வெளிப்படுத்திய ஷமர் உயிரற்றுக் கிடந்த மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் கிரிக்கெட்டைச் சற்றே தலைதூக்க வைத்துள்ளார்.
ரோட்னி ஹாக் சொன்ன எதிர்மறையான வார்த்தைகள் அணிக்குள் உத்வேகத்தைக் கொண்டு வந்ததென்றால் இந்த ஓவர்சீஸ் டெஸ்ட் வெற்றி ஒரு உலகக்கோப்பையை வென்ற தாக்கத்தை வீரர்களுக்குக் கொடுத்துள்ளது. டெஸ்ட் ஃபார்மேட்டின் மகிமையே அதுதான்!
இது ஆஸ்திரேலியாவின் தோல்வி என்றோ மேற்கிந்தியத்தீவுகளின் வெற்றி என்றோ முத்திரை குத்தப்பட்டுவதை விடவும், ஓர் இளம் வீரரின் விட்டுக் கொடுக்காத மனோதிடத்தையும், வைராக்கியத்தையுமே ஒருங்கே காட்சிப்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் போர்க்களத்தின் உஷ்ணத்தில் சாணை பிடிக்கப்பட்ட இன்னொரு வாளாக ஷமர் ஜோசப் ஜொலிக்கிறார்.