IND vs ENG: சிக்கலில் மாட்டிக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர்! அடுத்து என்ன செய்ய போகிறார்?

India vs England 2nd Test: இந்திய அணியில் சுழற்பந்தை சிறப்பாக ஆட கூடிய ஒரு சில வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர்.  சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் நன்றாக விளையாடி அணியில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டார்.  ஆனால், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்து வருகிறார்.  இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த ஐயர், முதல் இன்னிங்சில் வெறும் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவறான ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.  நன்றாக கிடைக்க கூடிய பந்தை பவுண்டரிக்கு அடித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது செஷனில் தனது விக்கெட்டை விட்டு கொடுத்தார்.  

டாம் ஹார்ட்லியின் பந்து வீச்சில் மிகவும் கீழே சென்ற பந்தை அடிக்க முயன்று, அண்டர்-எட்ஜ் ஆகியது. இதனை விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸால் சிறப்பான முடியில் பிடித்தார்.  ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க சிரமப்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவது சந்தேகமே. ஏனெனில், அவரது இடத்தில் அனுபவம் வாய்ந்த விராட் கோலி களமிறங்க உள்ளார்.  2வது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இல்லாத நிலையில் 4வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டார்.  அவர் மொத்தமாக 59 பந்துகள் விளையாடி 3 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் அடித்தார்.

“ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு நல்ல பந்தை அடிக்க முயன்று அவுட் ஆவது இது முதல் முறை இல்லை.  ஆனால் இது பென் ஃபோக்ஸின் உலகத் தரம் வாய்ந்த கேட்ச்” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் ராம்பிரகாஷ் கூறி உள்ளார்.  இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சாளரின் பந்தில் ஆட்டமிழப்பது இது மூன்றாவது முறையாகும். முதல் டெஸ்ட் போட்டியில் ரெஹான் அகமது மற்றும் ஜாக் லீச் பந்தில் ஆட்டமிழக்க, தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டாம் ஹார்ட்லி பந்தில் அவுட் ஆகி உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இளம் வீரர் துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இந்திய அணியின் மிடில்-ஆர்டரில் ஒரு இடத்தை பிடிக்க நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். 
குறிப்பாக சர்ஃபராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.  

கடந்த 2022ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் கடைசியாக அரை சதம் அடித்து இருந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அந்த போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் யாரும் எதிர்பார்க்காத முக்கியமான ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.  கான்பூரில் நியூசிலாந்திற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஐயர், அதன் பிறகு விளையாடிய 14 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.  ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் அவர் அடித்த ரன்கள் – 4, 12, 0, 26, 31, 6, 0, 4*, 35, 13, 27.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.