பிரபல மாடல் மற்றும் பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே பிப்ரவரி 1 அன்று உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியது. 32 வயதிலேயே கர்ப்பப்பைவாய் புற்றுநோயா என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இன்று மதியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தான் இறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதில் “கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடையே போதுமான அளவு இல்லை, அதற்காகத்தான் நான் இறந்துவிட்டதாக ஒரு வதந்தியைப் பரப்பினேன். தற்போது அது ஒரு பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்நோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. நான் இறந்துவிட்டதாகப் பரவிய வதந்தி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இது பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்டது என சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகவே சமீபமாக உலகளவில் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஸ்காட்லாந்து அரசு ‘ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் நோய்த்தடுப்புத் திட்டம்’ என்ற திட்டத்தை 2008- ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி 12 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘கர்பப்பைவாய் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் வளர்ச்சியைத் தடுப்பதில் HPV தடுப்பூசி 100% செயல்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளனர். தொடந்து மத்திய அரசும் தாக்கல் செய்த 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
பெண்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நான்காவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி 2020-ம் ஆண்டில் உலம் முழுவதும் 3.42 லட்சம் பெண்கள் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2022-ம் ஆண்டில் மட்டும் 1.23 லட்சம் பெண்களுக்கு கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதே ஆண்டில் 77,348 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கர்ப்பப்பைவாய் புற்றுநோயினால் உலகளவில் நிகழக்கூடிய மரணங்களில் இந்தியாவில் மட்டும் 25 சதவிதம் நிகழ்கின்றன.
இந்தப் புற்றுநோயை எப்படித் தடுப்பது என்பது குறித்துப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் இர்ஃபானா ஷாஹுல் ஹமீது:
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV). இந்த வைரஸானது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு (Cervix) பரவி நீண்ட நாள் அதே பகுதியில் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தும். உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிகவும் எளிதாகப் பரவக்கூடியது.

Obstetrician & Gynaecologist
குடும்பத்தில் ஏற்கெனவே வேறு யாருக்காவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது, இளம்வயதில் திருமணமாகியிருப்பது, இளம்வயதிலேயே கருத்தரிப்பது, அதிகமாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவது மற்றும் புகைப்பிடித்தல், உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் புற்றுநோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோக, ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பு இருப்பவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறிகள்
அடிக்கடி வெள்ளைப்படுதல், கர்ப்பப்பைவாய் பகுதியில் அதிகமான வலி, உடலுறவின்போது வலி, உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தக்கசிவு, மாதவிடாய் சமயத்துக்கு முன்பே ரத்தக்கசிவு, மெனோபாஸுக்கு பிறகு ரத்தக்கசிவு மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தக்கசிவு உள்ளிட்டவை ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்தப் புற்றுநோயை பாப் ஸ்மியர் (PAP SMEAR) எனப்படும் கர்ப்பப்பை வாய் பகுதியில் செய்யப்படும் திசுப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். ஆனால் பாப் ஸ்மியர் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் நிறைய பெண்களை இந்நோய்க்கு இழந்து வருகிறோம். மேலும், HPV தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகள் 11 முதல் 18 வயதுக்குள் இதைச் செலுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் முதல் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி மூலம் இந்தப் புற்றுநோயை பாதிப்பதற்கான வாய்ப்பைப் பல மடங்கு குறைக்க முடியும்” என்றார் அவர்.