இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் ஒவ்வோர் ஆண்டும், சிறைக்கைதிகளுக்கு உடல் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ சிறைச்சாலையில், கடந்த ஆண்டுக்கான உடல் பரிசோதனை டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாகச் சிறைக் காவல் அதிகாரி, “வழக்கமான முறையில் சிறைக் கைதிகளுக்கு மருத்துவச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது புதிதாகச் சிறைக்கு வந்த 36 சிறைக் கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், சிறையில் உள்ள மொத்த கைதிகளில், ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இப்போது 63 -ஆக அதிகரித்திருக்கிறது.
செப்டம்பரிலிருந்து ஹெச்.ஐ.வி பரிசோதனைக் கருவிகள் கிடைக்காததே சோதனை தாமதமானதற்குக் காரணம். பாதிக்கப்பட்ட கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் சிறைக்கு வருவதற்கு முன்பு, பலர் பயன்படுத்திய ஊசிகளைப் பயன்படுத்தியதால் இந்த நோய்க்கு ஆளாகியிருக்கலாம் எனக் கருதுகிறோம். ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் கைதிகள் அனைவரும் இப்போது லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிறை நிர்வாகம் விழிப்புடன், பாதிக்கப்பட்ட கைதிகளின் உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹெச்.ஐ.வி தொற்று காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மற்ற சிறைக் கைதிகளுக்கு மேலும் பரவுவதைத் தடுக்க தற்போதுள்ள சுகாதார நெறிமுறைகளை மதிப்பாய்வு செய்துவருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.