கூகுள் மேப் லொகேஷன் ஷேரிங்… 2 மணிநேரத்தில் திருடனைப் பிடித்த இளைஞர்..!

2005-ல் அறிமுகமான கூகுள் மேப் நாம் மேற்கொள்ளும் பயணங்களில் முக்கிய வழிகாட்டியாக உதவுகிறது.. நாம் பயணம் செல்லும் தொலைவு, வழித்தடம் போன்ற அனைத்து விவரங்களையும் விரைவாக தெரியப்படுத்துவதால் எந்தவொரு இடத்துக்கும் கூகுள் மேப் பயன்படுத்தி எளிதாக பயணிக்க முடிகிறது. அதேசமயம், கூகுள் மேப் மூலம் நாம் இருக்கும் இடத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

ஸ்மார்ட்போனில் கூகுள்மேப் லொகேஷன் ஷேரிங் ஆப்சனை எனெபிள் செய்து வைத்திருந்த ஒருவர், ரயில் பயணத்தில் திருட்டு போன செல்போன் மற்றும் பொருள்களை இரண்டு மணிநேரத்தில் கண்டுபிடித்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜ் பகத் என்ற அந்த இளைஞரின் தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு ரயிலில் பயணித்துள்ளார். இரவு நேர பயணத்தில், அவர் தூங்கிய போது அதே பெட்டியில் பயணித்த திருடன், அவரிடம் இருந்த மொபைல்போன் மற்றும் பையை திருடியுள்ளான். வண்டி நெல்லையை நெருங்கியதும் இறங்கிய திருடன் அடுத்த ரயிலில் நாகர்கோவில் நோக்கி திரும்பியுள்ளான்.

கண்விழித்த சமயத்தில் தன்னுடைய பொருள் திருட்டு போய்விட்டதை அறிந்தவுடன், பக்கத்தில் உள்ளவர் போன் மூலம் ராஜ் பகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, அந்த மொபைலில் இருப்பிடப் பகிர்வை (Location sharing) ஆன் செய்து, ராஜ் பகத் தன்னுடைய மொபைலில் முன்னதாக பகிர்ந்து வைத்திருந்தார். இதனால் மொபைலின் இருப்பிடத்தை அவரால் எளிதாக கண்காணிக்க முடிந்தது. திருடிய நபர், நெல்லையில் இறங்கி, அங்கிருந்து வேறொரு ரயிலில் நாகர்கோவில் வருவதை அறிந்துள்ளார்.

ராஜ் பகத் தனது நண்பர்களுடன் நாகர்கோவில் ரயில்நிலையம் விரைந்தார்.. ரயில்வே போலீஸாரின் துணையுடன் ரயில் நிலையத்தில் தயாராக இருந்துள்ளார். அங்கு கூட்டம் அதிகம் இருந்த சமயத்தில் திருடன் அங்கிருந்து நாகர்கோவில் நகர் பேருந்து நிலையத்துக்கு தப்பிச் செல்ல, இவர்களும் பின்தொடர்ந்து சென்றனர்.

கூகுள் மேப் காட்டும் லோகேசனில் திருடனை பின் தொடர்ந்து சென்றதும், இரண்டு மீட்டர் தொலைவு இருப்பதை துல்லியமாக காட்டியது. திருடன் அருகில் வந்தவுடன், அவன் கையில் உள்ள பை அடையாளம் காட்டியது…

ராஜ் பகத் தந்தை தொழிற்சங்கத்தில் உள்ளதால் அவரது பையில், சிஐடியு எழுத்து லோகோ இருந்தது. இது திருடனை அடையளம் காட்டியது.

அனைவரும் திருடனை மடக்கிப் பிடித்தனர். ராஜ் பகத், தந்தையின் செல்போன் மற்றும் உடைமைகளை மீட்டார். காவல்துறை சோதனை செய்ததில் எராளமான திருட்டு பொருள்களை அந்த திருடனிடம் இருந்து மீட்டனர்.

தகவல் தொடர்பை சரியாக பயன்படுத்தி, திருடனை பிடித்த ராஜ் பகத் மற்றும் அவரது நண்பர்களை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.