ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் உள்பட 21 பேரை விடுதலை செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அய்யனார் காலணி, கவிதா நகர் பகுதி மக்கள் 3 முறை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டவில்லை.
இந்நிலையில், கடந்த 2017 மே 5-ம் தேதி பாமக மாநில துணை தலைவர் திலகபாமா தலைமையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, மதுபாட்டில்களை உடைத்து கடைக்கு தீ வைக்கப்பட்டது. இது குறித்து அரசு சொத்தை சேதப்படுத்தியதாக திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் 14 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது பாமக மாநில பொருளாளராக உள்ள திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் உள்பட 21 பேரை விடுதலை செய்து நீதிபதி ஜெயகுமார் உத்தரவிட்டார்.