மும்பை: வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வழக்கில் சந்தா கோச்சாரை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மூலம் தான் கைது செய்யப்பட்டதைக் கேள்விக்குட்படுத்தி ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சார் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாயக்கிழமை) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
சந்தா கோச்சார் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவித்தது. இந்நிலையில், சந்தா கோச்சார் இன்று தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என்ஆர் போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி 9, 2023 அன்று வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கியின் கடன் கொள்கைகளை மீறி வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ₹3,250 கோடியை அனுமதித்ததாக குற்றம் சாட்டிய சிபிஐ, இந்தவழக்கில் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி கைது செய்தது. ஜாமின் கோரி சந்தா கோச்சாரும் தீபக் கோச்சாரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து ஜாமின் காலம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தான் கைது செய்யப்பட்டதும், கைது செய்யப்பட்ட விதமும் சட்ட விரோதமானது என புதிய வழக்கு ஒன்றை சந்தா கோச்சார் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் சந்தா கோச்சாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தாங்கள் கோரவில்லை என்றும், ஆனால், சந்தா கோச்சார் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதும், கைது செய்யப்பட்ட விதமும் சட்டவிரோதமானது என்பதே தங்கள் வாதம் என்றும் குறிப்பிட்டார்.