திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற, 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 2(எஸ்)-வது பிரிவு கூறுகிறது. அதாவது திருமணமாகாத பெண் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை என்பதை இது உணர்த்துகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. பாரபட்சமாக உள்ள இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எனக்கு திருமணமாகவில்லை. எனினும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

இந்தியாவில் திருமண பந்தத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தாயாவதுதான் விதிமுறையாக உள்ளது.திருமணம் செய்துகொள்ளாதவர் கள் குழந்தைக்கு தாயாவது விதிமுறை அல்ல. மனுதாரர் திருமணம் செய்துகொள்ளாமலேயே தாயாக விரும்புகிறார். அது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் பேசுகிறோம்.

திருமணம் என்ற பந்தம் நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமா வேண்டாமா? நாம் மேற்கத்திய நாடுகளைப் போன்றவர்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தை யார் என்றே தெரியாமல் உள்ளனர். அதே நிலை இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. திருமணபந்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக நீங்கள் எங்களை பழமைவாதி என்று முத்திரை குத்தினாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த சட்டத்தின் பிறபிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.