சென்னை, தியாகராயா நகரில் மாடித்தோட்டம் நண்பர்கள் சந்திப்பு என்ற தலைப்பில் பிப்ரவரி 4-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமுடி, தோட்டம் சிவா, அருண் டெர்ரஸ் கார்டன், இந்திரா கார்டன் மைத்ரேயன், பாபு ஆர்கனிக்ஸ், உழவர் ஆனந்த் என மாடித்தோட்டத்தில் ஆர்வமுள்ள பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 75 வயது மதிக்கத்தக்க அசோக் நகரைச் சேர்ந்த சரோஜா நாராயணன் பேசியபோது, “நான் இப்போதுதான் மாடித்தோட்டம் ஆரம்பித்திருக்கிறேன். இங்கே வந்ததில் அதிகம் கற்றுக்கொண்டேன். உதாரணமாக எந்த நேரத்தில் எதை விதைத்தால் நன்றாக இருக்கும். இங்கே வந்தது மாடித்தோட்டத்தை கைவிடக் கூடாது என்றும் மேலும் செய்வதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இந்த நிகழ்வு இருக்கிறது” என்றார்.
பட்டதாரியான செல்வராஜ் பேசியபோது, “சமூக வலைதளத்தில் பார்த்து இங்கே வந்தேன். நினைத்ததை விட அதிக மக்கள் வருகை தந்திருக்கின்றனர். இங்கே மாடித் தோட்டத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று நாங்கள் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு பூனைக்காலி, சிவப்பு வெண்டை, மூக்குத்தி அவரை, சிவப்பு அவரை போன்ற அரியவகை விதைகள் கிடைத்தன. அதேபோல செடிகளை வளர்க்க மண்ணுடைய கலவை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நன்றாகத் தெரிந்துகொண்டோம். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கவேண்டும்” என்று கூறினார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியம் கவிதா பேசியபோது, “நான் இங்கு வந்ததற்கான காரணம் விதைகள் தான். இந்த நிகழ்வு என்பது வெறும் விதை பகிர்வு மட்டும் கிடையாது. தற்சார்பு வாழ்க்கைக்கான முதல் படி என்றே சொல்லவேண்டும். எனக்கு நிறைய அரிய வகை விதைகள் கிடைத்திருக்கின்றன. இந்த நிகழ்வை நடத்தியவர்களிடம் மட்டும் நான் கற்றுக்கொள்ளவில்லை. இதில் பங்கு பெற்ற நிறைய நபர்களிடம் பேசி நிறையத் தெரிந்துகொண்டேன்” என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான இந்திரா கார்டன் மைத்ரேயன் பேசியபோது, “மாடித்தோட்டம் அமைப்பதற்கு தைப்பட்டம், ஆடிப்பட்டம் ஏற்றவை. இப்போது தைப்பட்டம் என்பதால் இந்த நேரத்தில் மாடித்தோட்டம் அமைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினோம். நாட்டு விதைகளை மீட்டிருவாக்கம் செய்வதில் மாடித்தோட்டம் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன.

அந்தவகையில் விதைகளை பகிர்ந்து கொண்டோம். அதேபோல மாடித்தோட்டம் பற்றிய அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டனர். நாங்கள் நினைத்தது என்னவோ 100 இருந்து 150 மக்கள் மட்டுமே வருவார்கள் என்று அதற்கேற்ப ஏற்படுங்கள் செய்தோம். ஆனால் வந்தவர்களோ 400 இருந்து 500 வருகை தந்தனர்.

அனைவரும் நஞ்சு இல்லாதே விதைகளை விதைத்துச் சாப்பிடவேண்டும். இங்கே பகிரப்பட்ட விதைகள் மூலம் பல விதைகள் கிடைத்து இன்னும் பல மக்கள் அதில் பயன்பெறவேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல விஷயங்களை அங்கே பகிர்ந்த பின், விதைகள் பகிரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தாண்டி அங்கே கலந்துகொண்ட அநேக நபர்கள் மற்றவர்களுக்கு விதைகளைப் பகிர்ந்து நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.