புதுடில்லி,:டில்லியில், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நரேலா துணை நகர வளர்ச்சிப் பணிகளுக்காகவும், நிலப் பயன்பாட்டை மாற்ற, டில்லி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
டில்லி மேம்பாட்டு ஆணைய கூட்டம் அதன் தலைவரும், டில்லி துணை நிலை கவர்னருமான சக்சேனா தலைமையில் நடந்தது.
நரேலா துணை நகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் டில்லி மாநகர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டன. அதற்காக, நில பயன்பாட்டை மாற்றுவதற்கு, இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்பதிவு
அவுசண்டி கிராமத்தில் மின்சார துணை மின் நிலையம், ஜங்புராவில் ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல, ‘தீபாவளி சிறப்பு வீட்டுவசதி திட்டம் 2023’ன் மின்-ஏலம் கடந்த நவம்பர் 30ல் துவங்கி டிசம்பர் 29ல் நிறைவடைந்தது. அவற்றில், 1,556 வீடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு 19பி, செக்டார் 14 மற்றும் துவாரகாவின் இடதுபுறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மேலும் ஒரு சுற்று மின்-ஏலம் நடத்தவும் ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
லோக்நாயக்கபுரம் நடுத்தர வருமானப் பிரிவினருக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கவும் ஆணைய கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
நரேலா செக்டார் ஏ-1 மற்றும் -ஏ-4ல் உள்ள 440க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு ஊக்கத் தொகையாக பொது மக்களுக்கு 15 சதவீதமும், மத்திய, மாநில அரசு மற்றும் அரசு நிறுவன ஊழியர்களுக்கு 25 சதவீதமும் தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்கர் காலனியின் 246 குறைந்த வருமானப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளில் 15 சதவீத தள்ளுபடியை நீட்டிக்கவும் ஆணைய உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினர்.
மேலும், டில்லியில் நெரிசல் இல்லாத போக்குவரத்தை ஏற்படுத்த காஜிபூரில் ஐந்து வழிச்சாலை அமைக்க 7,205 சதுர மீட்டர் நிலப்பரப்பை பொழுதுபோக்கு பயன்பாட்டில் இருந்து ‘போக்குவரத்து’ பயன்பாட்டுக்கு மாற்ற கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல்
அவுசண்டி கிராமத்தில் 39.603 ஏக்கரில் மின்சார துணை மின்நிலையம் அமைக்கவும்,
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், பொதுப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்க, 33.33 ஏக்கர் நிலத்தை ‘தொழில்துறை’ மற்றும் ‘பகுதி பயன்பாட்டு’ என்பதில் இருந்து ‘போக்குவரத்து’ பயன்பாட்டுக்கு மாற்றி ஜங்புராவில் ஆர்.ஆர்.டி.எஸ்., விரைவு ரயில் போக்குவரத்துக்கு வழங்கவும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்