வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

இஸ்லாமாபாத்,

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது.

இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய பலத்த பாதுகாப்பு மத்தியிலும் நேற்று அங்கு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் அந்த நாட்டை அதிரவைத்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 2 தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

முதல் குண்டு வெடிப்பு, பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் நகரில் நடந்தது. சுயேட்சை வேட்பாளரான அஸ்பந்த்யார் காகர் என்பவரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தேர்தல் அலுவலகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின.

குண்டு வெடிப்பில் சிக்கி பலர் உடல் சிதறி பலியாகினர். இன்னும் பலர் கை, கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனால் அந்த இடமே ரத்த களறியாக காட்சியளித்தது.

குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே முதல் குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள் பலுசிஸ்தானின் பஞ்கூர் நகரில் ஜமியத்-உலேமா இஸ்லாம்-பாகிஸ்தான் கட்சியின் வேட்பாளரான கில்லா அப்துல்லாவின் தேர்தல் அலுவலகத்துக்கு அருகே மற்றொரு குண்டு வெடித்தது.

கட்டிடத்துக்கு வெளியே ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் ‘ரிமோட்’ மூலம் வெடிக்க செய்ததாக தெரிகிறது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் தேர்தல் அலுவலகமும், அதன் அருகில் உள்ள பல கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன.

குண்டு வெடிப்பில் சிக்கி பலர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் அடுத்தடுத்து நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியானதாகவும், 42 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பலுசிஸ்தான் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த 2 குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.