யூனியன் பிரதேச மாநிலமான புதுச்சேரி, கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.
அதற்குக் காரணம், வடிவமைக்கப்பட்ட வீதிகள், பிரெஞ்சு டவுனில் இருக்கும் நேர்த்தியான சாலைகள், மஞ்சள் நிற சுவர்கள், பிரெஞ்சு கட்டடங்கள் போன்றவைதான். அதைவிட முக்கியமான காரணம் சென்னை உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவான கட்டணமும், அரசு அனுமதி பெறுவதில் இருக்கும் எளிதான நடைமுறைகளும்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டங்களிலும், அதன் பிறகும் புதுச்சேரியை மையப்படுத்தி ஒரு சில படங்கள் எடுக்கப்பட்டது. அதையடுத்து 1992-ல் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான பாண்டியன் திரைப்படம் புதுச்சேரியைப் பற்றி பேச வைத்தது. அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தனது அக்கா ஜெயசுதாவை கைது செய்துகொண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் போலீஸ் சீருடையில் நடந்து வருவார் ரஜினிகாந்த்.

அந்தக் காட்சியை திரையில் பார்த்த புதுச்சேரி மக்கள், `நம்ம ஊர்’ என்று சிலாகித்தார்கள். அதையடுத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2002-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா நடித்து வெளியான `மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் பெரும்பகுதி புதுச்சேரியிலேயே படமாக்கப்பட்டது. அந்த படத்திலிருந்துதான் கோடம்பாக்கத்தின் பார்வை புதுச்சேரி மீது முழுமையாக விழுந்தது என்று சொல்லலாம். அதிலிருந்து கோலிவுட் திரையுலகம் புதுச்சேரியில் நிரந்தரமாகக் கூடாரமிட்டது. ரஜினிகாந்த் தொடங்கி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இங்கு எடுக்கப்பட்டு, அது வெற்றி பெற்றும் இருக்கிறது. கோலிவுட் மட்டுமல்ல, `லைஃப் ஆஃப் ஃபை’ ஹாலிவுட் படம் கூட புதுச்சேரியில் படமாக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் அடையாளங்களான அரிக்கமேடு துறைமுகம், கடற்கரை சாலை, சுண்ணாம்பாறு படகு இல்லம், பாரதி பூங்கா உள்ளிட்டவைகளை பல திரைப்படங்களில் காண முடியும்.
அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கின்றன ஏ.எஃப்.டி, பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலைகள். இந்த மூன்று பஞ்சாலைகளும் புதுச்சேரி வரலாற்றில் முக்கியமானவை. 1828, 1892, 1898 ஆண்டுகளில் பிரெஞ்சியர்களால் துவக்கப்பட்ட இந்த பஞ்சாலைகளில், சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். 1936 ஜூலை மாதம் இந்த மூன்று தொழிற்சாலைகளிலும் நேரம் காலமின்றி பணியாற்றிய தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, 8 மணி நேர வேலையை முன்னிறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர். அதை ஒடுக்குவதற்கு இராணுவத்தை இறக்கியது பிரெஞ்சு அரசு.

பீரங்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் கடலூர் சாலையில் அணிவகுத்த பிரெஞ்சு இராணுவ வீரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பீரங்கிகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் பிரயோகித்தனர். அதே இடத்தில் 12 தொழிலாளர்கள் சுருண்டு விழுந்து இறந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்துதான் பிரெஞ்சிந்திய தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது. அதன் விளைவாக ஆசிய கண்டத்திலேயே இங்குதான் முதலில் 8 மணி நேர வேலை முறை அமல்படுத்தப்பட்டது.
இந்த மூன்று பஞ்சாலைகளின் இயக்கமும் படிப்படியாகக் குறைந்து, 2011-ம் ஆண்டிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட்டது. சுமார் 30 ஏக்கர்களில் விரிந்திருக்கும் இந்த ஏ.எஃப்.டி தொழிற்சாலை வளாகத்தைச் சுற்றி, பிரமாண்டமான சுவர்கள் எழுந்து நிற்கின்றன. இந்த பஞ்சாலைகளில்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த `லால் சலாம்’ திரைப்படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துவரும் `கோட்’ (GOAT) திரைப்படமும் சமீபத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படப்பிடிப்புத் தளத்தில்தான் விஜய் தன் தோழர்களைச் சந்தித்து செல்ஃபி எடுத்தது. “தொழிற்சாலை செட்-அப்புடன் இருக்கும் இந்த வளாகம், கிளைமாக்ஸ் காட்சிகள் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். படப்பிடிப்புக்கு வரும் கேரவன் உள்ளிட்ட பேருந்துகளை நிறுத்துவதற்கும், திரைத் தொழிலாளர்கள் அமர்வதற்கும் வசதியாக இருக்கும்.
அத்துடன் ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களைத் திறந்தவெளியில் வைத்து படப்பிடிப்பை நடத்தினால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதைத் தவிர்ப்பதற்காகவே, இங்கு படப்பிடிப்பை நடத்துகிறோம்” என்கின்றனர் படக்குழுவினர்.