Police concentration on the borders of farmers protest notice | விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எல்லைகளில் போலீஸ் குவிப்பு

புதுடில்லி:தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் நுழைவதை தடுக்க, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றுதல், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்.

மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

மேலும், புதுடில்லி அருகே உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா தொழில் நகரங்கள் அமைக்க கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு நியாயமான விலை வழங்கக் கோரி, டிசம்பர் மாதம் போராடி வருகின்றனர்.

நேற்று முன் தினம், நொய்டாவில் இருந்து தலைநகர் டில்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மயூர் விஹார் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, விவசாயிகள் மீண்டும் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நிர்வாக அலுவலகங்கள் முன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச விவசாயிகள் வரும் 13ம் தேதி, ‘டில்லி சலோ’ என்ற தலைநகர் டில்லிக்குள் கூட்டமாக நுழைந்து மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, ஹரியானா மற்றும் உ.பி., எல்லையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துணை ராணுவப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

‘டில்லி சலோ’ என்ற தலைநகர் டில்லியை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த ராய் ஆகியோர் சண்டிகரில் சந்தித்துப் பேசினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், மீண்டும் சந்தித்துப் பேச இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஏற்பாடு செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.